சத்தியமங்கலம், ஜன. 13-
தாளவாடி மலை பகுதியில், வெவ்வேறு பகுதியில், கூட்டமாகவும், தனியாகவும் யானைகள் 'மிரட்டி' வருவதால், விவசாயிகளும், மக்களும் பீதி அடைந்துள்ளனர்.
தாளவாடி மலையில் ஜீரகள்ளி வனச்சரக பகுதியான குருபருண்டி கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு ஜீரகள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 20க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன. ராசப்பா என்பவரின், ௨ ஏக்கர் மானாவாரி நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட ராகி பயிர், கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. விடிய விடிய அவற்றை தின்று தீர்த்தன.
*கேர்மாளம் அருகே ஒரு அரசு பஸ், 40 பயணிகளுடன் கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து சத்தியமங்கலத்துக்கு, நேற்று முன்தினம் மாலை வந்தது. கெத்தேசால் என்ற இடத்தில் ஒற்றை யானை சாலையில் நின்றது. இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். பஸ்சை நோக்கி வந்த யானை முன்பக்க கண்ணாடியை முட்டி தள்ளி உடைத்தது. பயணிகள் பயத்தில் நடுங்கினர். சிறிது நேரத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லவே, டிரைவர் பஸ்சை இயக்கி சென்றார்.
* கேர்மாளத்தை அடுத்த காடுபசுவன் மாளத்தை சேர்ந்தவர் மாதேஷ், 43; மூன்று ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிரிட்டு அறுவடை செய்து களத்தில் போட்டிருந்தார். நேற்று முன்தினம் காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை மாதேஷ் தோட்டத்தில்
புகுந்தது.
அங்கு காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாதேஷை யானை துரத்தி தாக்கியது. அவர் சத்தமிடவே ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் யானையை விரட்டி விட்டு, அவைர மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டார்.