சென்னிமலை தேர்த்திருவிழா
தற்காலிக கடைகளுக்கு ஏலம்
சென்னிமலை, ஜன.13 -
சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, வரும்,
28ம் தேதி முதல் பிப்.,10ம் தேதி வரை நடக்கிறது. இதில் பிப்.,4ம் தேதி முதல், 9ம் தேதி வரை முக்கிய விழா நடக்கிறது. இதை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இதற்கான ஏலம் சென்னிமலை டவுன் பஞ்., அலுவலகத்தில், செயல் அலுவலர் பார்த்தீபன் தலைமையில் நேற்று
நடந்தது.
தற்காலிக கடைகள் அமைப்பவர்களிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம், ௧.௬௩ லட்சம் ரூபாய், விழா காலங்களில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்து கொள்ள, 65 ஆயிர் ரூபாய் என, மொத்தம், ௨.28 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
கவிழ்ந்து அமுக்கிய பரிசல் மீன் பிடி தொழிலாளி பலி
சத்தியமங்கலம், ஜன. 13-
சத்தி அருகே, பவானி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து அமுக்கியதில், மீன் பிடி தொழிலாளி பலியானார்.
சத்தியமங்கலம் அருகே மாக்கினாங்கோம்பை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கிய மேரி, 43, மீன் பிடி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை அரியப்பம்பாளையம் செக் டேம் அருகில், பவானி ஆற்றில் மீன் தனது உறவினரான மல்லிகாவுடன் வழக்கம்போல், பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
செக் டேமை கடந்து செல்ல ஆரோக்கியமேரி பரிசலில் ஏற முயற்சிக்கும்போது, தவறி விழுந்து சுழலில் சிக்கி கொள்ள, பரிசல் அவர் மீது கவிழ்ந்து அமுக்கியது. மல்லிகா சத்தமிடவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற ஓடி வந்தனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். சத்தி போலீசார்
விசாரிக்கின்றனர்.
கவர்னரை கண்டித்து
ஆர்ப்பாட்டம்
காங்கேயம், ஜன. 13-
ஆர்.எஸ்.எஸ்., கருத்தியலை தமிழகத்தில் புகுத்தும், ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பின் காங்கேயம் பொறுப்பாளர் கவி தலைமை வகித்தார்.
கவர்னரை கண்டித்து கோஷமிட்டனர். புரட்சிகர இளைஞர் முன்னணி, ம.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். காங்கேயம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 26 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்
பட்டனர்.
தேசிய தர சான்றிதழ்;
மருத்துவ குழு ஆய்வு
ஈரோடு, ஜன 13-
ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு, மருத்துவ சேவை வழங்கும் வகையில், 76 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் மாநகராட்சியில், 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏழுக்கும், கிராமப்புறத்தில், 66 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 26க்கும் மத்திய அரசின் தேசிய தர சான்றிதழ் பெற விண்ணப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேசிய தர உறுதி குழுவினர், ஈரோடு மாநகராட்சி அகத்தியர் வீதி நகர்ப்புற சுகாதார நிலையத்தில், நேற்று ஆய்வு
மேற்கொண்டனர்.
வரும் நாட்களில் பெரியசேமூர், சூரியம்பாளையம், நேதாஜி சாலை, கருங்கல்பாளையம், சூரம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழுவினர் ஆய்வு செய்வர்.
பிஷப் தார்ப் கல்லுாரியில்
பொங்கல் விழா
தாராபுரம், ஜன. 13-
தாராபுரம், பிஷப் தார்ப் கல்லுாரியில், பொங்கல் விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் விக்டர் லாசரஸ் துவக்கி வைத்தார். துணை முதல்வர் பிரேம்நாத், புல முதன்மையர் பாஸ்கர் பாஸ்மி முன்னிலை வகித்தனர்.
ஒவ்வொரு துறை சார்பிலும் வைக்கப்பட்ட பொங்கலை, பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக கூறி மாணவர்கள் கொண்டாடினர். விழாவை முன்னிட்டு கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்பட பல்வேறு போட்டி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
விவேகானந்தர்
பிறந்தநாள் விழா
தாராபுரம், ஜன. 13-
தாராபுரத்தில் பா.ஜ., சார்பில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. பழைய நகராட்சி அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மூத்த நிர்வாகிகள் வடுகநாதன், செல்வன் முன்னிலை வகித்தனர்.
சுவாமி விவேகானந்தரின் சிறப்பு குறித்து, மாநில சிறுபான்மை அணி நிர்வாகி பிஜு அலெக்ஸ் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம், தர்மராஜ், விவேகானந்தன் உள்பட பலர் பங்கேற்றனர். விவேகானந்தர் படத்துக்கு மலர் துாவி மரியாதை செய்தனர். நகராட்சி, 17வது வார்டு பகுதியில், பா.ஜ., வார்டு தலைவர் ராஜசேகர் கட்சி கொடியேற்றினார்.
தெருநாய்களுக்கு தடுப்பூசி
மாநகரில் பணி தீவிரம்
ஈரோடு, ஜன 13-
ஈரோடு மாநகராட்சியின், ௬௦ வார்டுகளிலும் சமீப காலமாக, நாய் தொல்லை அதிகரித்து விட்டது. இந்நிலையில் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் தெருநாய்களை பிடித்து, தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. பயிற்சி பெற்ற துாய்மை பணியாளர்கள் வலை வீசி பிடித்து, கால்நடை மருத்துவமனைக்கு, நாய்களை வேனில் ஏற்றி சென்று, தடுப்பூசி செலுத்துகின்றனர். அதன்பின் பிடித்த இடத்திலேயே விட்டு செல்கின்றனர். வீரப்பன்சத்திரம் பகுதியில் திரிந்த தெருநாய்களுக்கு நேற்று தடுப்பூசி போட்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. விரைவில் கருத்தடை செய்யப்படும்' என்றனர்.
வரும் 21ல் தனியார் துறை
வேலை வாய்ப்பு முகாம்
ஈரோடு, ஜன. 13-
ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வரும், 21ல் ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 200க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிப்பவர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2, பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தோர், ஐ.டி.ஐ., தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல், கணினி இயக்குவோர், ஓட்டுனர், தையல் கற்றவர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து, முகாமில் பங்கேற்கலாம். கூடுதல் தகவல் பெற, 0424 2275860, மின்னஞ்சல் முகவரி erodemegajobfair@gmail.comல் அறியலாம்.
நுண்ணுயிர் கிடங்கில் விபத்து
தொழிலாளி எலும்பு முறிந்தது
ஈரோடு, ஜன 13-
மாநகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கில், பெல்டில் கை சிக்கியதில், துாய்மை பணியாளருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
ஈரோடு அருகே கொளத்துப்பாளையத்தில், மாநகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கு உள்ளது. மாநகராட்சி வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பையை பிரித்து, பயோ மைனிங் முறையில் இங்கு மறுசுழற்சி செய்யப்படுகிறது.
பவானியை சேர்ந்த துாய்மை பணியாளர் முருகன், 56, மையத்தில் நேற்று வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரவை இயந்திர கன்வயர் பெல்டில், முருகனின் வலது கை சிக்கியது. இதில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அலறி துடித்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிறகு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேயர் நாகரத்தினம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், முருகனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
கோவில் ஊழியர்களுக்கு
சீருடை வழங்கல்
சென்னிமலை, ஜன. 13-
சென்னிமலை முருகன் கோவிலில், பணியாற்ற கூடிய நிரந்த பணியாளர்கள் 35 பேர், அர்ச்சகர்கள், ஒதுவார், ஆகியோருக்கு புத்தாடை சீருடைகள் வழங்கும் விழா சென்னிமலை மலை மீது கோவில் மண்டபத்தில் நடைந்தது.
விழாவிற்கு கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார், பணியாளர்களுக்கு சீருடைகளை மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ்., செல்வம் வழங்கினார், விழாவில் சென்னிமலை பேரூர் தி.மு.க., செயலாளர் ராமசாமி, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதுகலை ஆசிரியருக்கு
பணி மூப்பு சரிபார்ப்பு
ஈரோடு, ஜன. 13-
அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவதற்காக, பணி மூப்பு சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், பணி மூப்பு சரிபார்ப்பு, மாவட்ட கல்வி அலுவலர் மாதேசன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், 10 ஆண்டு மற்றும் ௨௦ ஆண்டு பணி முடித்த, 56 பள்ளிகளை சேர்ந்த, 84 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு, பணி மூப்பு சரிபார்க்கப்பட்டதாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
தற்காலிக ஆசிரியர் பணி
விண்ணப்பம் வரவேற்பு
ஈரோடு, ஜன. 13-
அந்தியூர் காலனி, அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில், காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம், பள்ளி மேலாண்மை குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிவோர்ஸ ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டியல் இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பள்ளி அமைந்துள்ள பகுதி, அதற்கு அருகே உள்ளவர்களுக்கு முன்னுரிமை. 7,500 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும். உரிய கல்வி சான்றுடன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
சாலை பராமரிப்பு
ஊழியர் கூட்டம்
ஈரோடு, ஜன. 13-
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் கோட்ட தலைவர் சிவகுமார் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
மாநில நெடுஞ்சாலை உட்பட நெடுஞ்சாலைகளை தனியார் பராமரிப்புக்கு அனுமதிக்கக்கூடாது. சாலை பணியாளர்களின், 41 மாத போராட்ட காலத்தை பணி காலமாக ஏற்று அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி பிப்., 3ல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றினர்.
13 கிலோ விதை
விற்பனைக்கு தடை
ஈரோடு, ஜன. 13-
பெருந்துறை வட்டாரத்தில், விதை விற்பனை நிலையங்களில், விதை ஆய்வாளர் சுமையா தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பதிவு சான்றிதழ், முளைப்பு திறன் அறிக்கை இல்லாத விதை குவியல், 13.750 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 48 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 6 வீரிய ஒட்டு காய்கறி விதைகளை விற்பனை செய்ய தடை விதித்தனர்.
கோவிலில் பிரம்பு பிடித்து
தீ மிதித்த பக்தர்கள்
அந்தியூர், ஜன. 13-
ஓங்காளியம்மன் கோவிலில் நடந்த தீ மிதி விழாவில், பிரம்பை கையில் பிடித்தபடி, பக்தர்கள் குண்டம்
இறங்கினர்.
ஆப்பக்கூடல், கரட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம், 30ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடன்
செலுத்தினர்.
இந்நிலையில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆண், பெண்கள், சிறுவர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர், கையில் பிரம்பு பிடித்தபடி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
'கண்ணாமூச்சு ஏனடா... என் கருப்பா...
அடம்பிடிக்காமல் சிக்கி தொலைடா!'
சத்தியமங்கலம், ஜன. 13-
கண்ணாமூச்சு காட்டும் கருப்பனை பிடிக்கும் முயற்சியில், வனத்துறையினர் டிரோன் மூலம் தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகினாரை, கரளவாடி, அக்கூர்ஜோரை, ஜோரா ஓசூர் உள்ளிட்ட கிராமங்களில், ஒற்றை யானை கருப்பன், பயிர்களை சேதம் செய்து வருகிறது.
கருப்பனை பிடிக்க ஆனைமலையில் இருந்து முத்து, கபில்தேவ் என இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. பணியில் தொய்வு ஏற்பட்டதால், ஆனைமலையில் இருந்து கும்கி யானை கலீம் நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறையினர் நேற்று மூன்று குழுக்களாக பிரிந்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கினர்.