ஈரோடு, ஜன. 13-
காஞ்சிக்கோவில் அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த தொழிலாளி, நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
காஞ்சிக்கோவில் அருகே வெள்ளியங்காட்டை சேர்ந்த சின்னத்தம்பி மகன் பூபதி, 25, கட்டட தொழிலாளி. பெருந்துறையை சேர்ந்த சிறுமியை காதலித்ததாக, போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வந்து வழக்கமான வேலைகளை செய்து வந்தார். கடந்த, 4ல் வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கடந்த, 7ல் கரட்டுப்பாளையம் பகுதியில் கீழ்பவானி கிளை வாய்க்காலில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
காஞ்சிகோவில் போலீசார் விசாரித்தனர். இதில் பெருந்துறை சிறுமியிடம் மீண்டும் பூபதி பேசி வந்துள்ளார். இதையறிந்த சிறுமியின் உறவினர்களான விக்னேஷ், 25, இவரது தந்தை ஆறுமுகம், 50, பரமசிவம், 51, ஆகியோர் பூபதியை மொபைல்போனில் சம்பவ இடத்துக்கு வரவழைத்துள்ளனர். சமாதனம் பேசுவது போல் மது குடித்து, அவரை அடித்து கொலை செய்து, வாய்க்காலில் வீசி சென்றது தெரிந்தது. விக்னேஷ், பரமசிவத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவான ஆறுமுகத்தை தேடி வந்தனர். இந்நிலையில் ஈரோடு குற்றவியல் முதலாம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிரின்ஸ் சாமுவேல் ராஜ் முன், ஆறுமுகம் நேற்று சரணடைந்தார்.