காங்கேயம், ஜன. 13-
ஆறுபடை வீடுகளில் முதன்மையானதும், புகழ்பெற்றதுமான பழநி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு, பாதயாத்திரை புறப்பாடு தொடங்கியுள்ளது. காங்கேயம் வழியாக பக்தர்கள் செல்லத் தொடங்கியுள்ளனர்.
தமிழ் கடவுள் முருகன் குடிகொண்டுள்ள ஆறுபடை வீடுகளுக்கும் மார்கழி, தை மாதத்தில் பக்தர் மாலை அணிந்து பாதயாத்திரை செல்வது தொன்று தொட்டு நடந்து வருகிறது.
ஆறுபடை வீடுகளில் முதன்மை பெற்றதும், பாலகனாக முருக கடவுள் காட்சி தருவதும் பழநி கோவிலின் சிறப்பாகும். முருகனுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மாலை அணிந்து விரதமிருந்து பக்கதர்கள் பாதயாத்திரையாக காவடி சுமந்து சென்று நேர்த்தி கடன்
செலுத்துகின்றனர்.
நடப்பாண்டு பாதயாத்திரை பயணத்தை முருக பக்தர்கள் தொடங்கியுள்ளனர். தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், காங்கேயம் வழியாக செல்ல தொடங்கியுள்ளனர். வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.