கரூர், ஜன. 13-
கரூர் மாவட்டம், க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள க.பரமத்தியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், அப்பகுதியை சுற்றியுள்ள முன்னுார், குப்பம், பவித்திரம், நெடுங்கூர், காருடையாம்பாளையம், நடந்தை, ஆரியூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் நுாற்றுக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன.
க.பரமத்தி சுற்று வட்டார பகுதி மக்கள் பல்வேறு வேலை நிமித்தமாக வெளியூர் செல்லவும், வெளியூர்களிலிருந்து க.பரமத்தி பகுதிக்கு வரவும், அரசு மற்றும் தனியார் பஸ்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்சமயம் க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் பஸ்களுக்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். மேலும், இந்த இடம் வளைவு பகுதியாக இருப்பதால் வாகனங்கள் அதிவேகமாக செல்லும்போது, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலையை கடக்கும் பயணிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும், பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், காத்திருப்பு இடம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளின் நலன் கருதி, க.பரமத்தி பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டியது அவசியம்.