செட்டிபாளையம் சாலையை
சீரமைக்க வேண்டுகோள்
கரூர், ஜன. 13-
கரூர் அருகே செட்டிபாளையம் சாலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட
குடியிருப்புகள் உள்ளன. இவற்றில், 500க்கும் மேற்பட்ட மக்கள்
வசிக்கின்றனர். நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் இந்த வழியே
சென்று வருகின்றன. இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் உள்ள
சாலை சேதமடைந்து பல மாதங்களாகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலையில், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி, சுகாதார கேடு
ஏற்படுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, செட்டிப்பாளையம் சாலையை சீரமைக்க வேண்டும் என,
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காசநோயை கண்டறியும்
வாகனம் அறிமுகம்
கரூர், ஜன. 13-
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நவீன நடமாடும் இலவச, காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதனை, கலெக்டர் பிரபுசங்கர், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன் பின், அவர் கூறியதாவது:
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்துக்கு, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், தமிழக அரசு நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் ஒன்றை வழங்கியது. இந்த டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில், 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் கொண்டது.
மேலும், காசநோய் பற்றிய விழிப்புணர்வு வீடியோக்களை பொதுமக்களுக்கு ஒளிபரப்பும், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காச நோயாளிகளுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க, இந்த வாகனத்தில் அகல திரை 'டிவி' பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் காசநோய் கண்டறியும் சேவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்றடையும். இந்த செயல்பாட்டை பயன்படுத்தி, காசநோய் இல்லாத கரூரை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புனவாசிப்பட்டியில்
கால்நடை மருத்துவ முகாம்
கிருஷ்ணராயபுரம், ஜன. 13-
கிருஷ்ணராயபுரம் அருகே, புனவாசிப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில் மகாதானபுரம் கால்நடை மருத்துவ அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். இதில், புனவாசிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் வளர்க்கும் பசு, இதர கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், சினை பரிசோதனை, கலவை உப்பு வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கபட்டது. மகாதானபுரம் கால்நடை மருந்தக ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, மருந்தக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
'நம்ம ஊரு மோடி
பொங்கல்' விழா
கரூர், ஜன. 13-
கரூர், ராயனுாரில் பா.ஜ., சார்பில், ''நம்ம ஊரு மோடி பொங்கல்'' விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் பா.ஜ., சார்பில், ''நம்ம ஊரு மோடி பொங்கல்" என்ற பெயரில் பொங்கல் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, கரூர், ராயனுார், பொன் நகர் பஸ் ஸ்டாப் அருகே, கரூர் தெற்கு மாநகர பா.ஜ., சார்பில் ''நம்ம ஊரு மோடி பொங்கல்" விழா நடந்தது. இதில், கட்சியின் மாநகர தலைவர் ரவி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செந்தில்நாதன், பங்கேற்று, விழாவை தொடங்கிவைத்தார். விழாவில், 101 பெண்கள் பொங்கல் வைத்தனர். பின், மகளிர், குழந்தைகளுக்கு இசை நாற்காலி போட்டியும், ஆண்களுக்கு பானை உடைத்தல் போட்டியும் நடத்தப்பட்டது.
முன்னதாக ருத்ரா பரதநாட்டிய குழுவினரின் நாட்டியம் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், பா.ஜ., மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் குணசேகரன், மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரி, பொதுச் செயலாளர் யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கழிவுநீர் கால்வாய் அடைப்பு
நோய் பரவும் அபாயம்
கரூர், ஜன. 13-
கரூர் அருகே ஆத்துார் சுற்று வட்டார பகுதிகளில், கழிவுநீர் செல்ல
வசதியாக, வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில்,
இந்த கால்வாயில் பல மாதங்களாக முட் செடிகள் வளர்ந்து, புதர்போல்
காட்சியளிக்கிறது. மேலும், கால்வாய் முழுதும் மண் அடைப்பு
உள்ளதால், மழை பெய்யும் போது, சாக்கடை நீர் தேங்கி, சுகாதார
கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்தி ஏற்பட்டு, நோய் தொற்று பரவும்
அபாயமும் உள்ளது. எனவே, ஆத்துார் பகுதியில் கழிவுநீர்
கால்வாயை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என,
பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காந்தி கிராமத்தில்
தெரு நாய்களால் அச்சம்
கரூர், ஜன. 13-
கரூர் காந்தி கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக நாய்கள் திரிவதால் பள்ளி
செல்லும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் அச்சத்துடன் சென்று
வருகின்றனர். சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி கடிக்கின்றன. சாலையும் சேதமடைந்து மோசமாக உள்ள நிலையில், நாய்கள் துரத்தும்போது வாகன ஓட்டிகள் நிலை
தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, தெரு நாய்களை அப்புறப்
படுத்த, கரூர் மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சாலை பாதுகாப்பு வார மருத்துவ முகாம்
கிருஷ்ணராயபுரம், ஜன. 13-
மாயனுார் அருகே, மணவாசி டோல்கேட் நிர்வாகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
டோல்கேட் நிர்வாக மேலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 11ல் தொடங்கி, 17ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், நேற்று காலை, கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
முகாமில், கரூர் - திருச்சி சாலை வழியாக சென்ற லாரி டிரைவர்கள், வாகன ஓட்டிகளுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் ரமேஷ் மருத்துவ ஆலோசனை வழங்கினார். ஏற்பாடுகளை மணவாசி டோல்கேட் நிர்வாகத்தினர்
செய்திருந்தனர்.
டிப்பர் லாரி பறிமுதல்
கரூர், ஜன. 13-
கரூர் அருகே, 25 டன் சுண்ணாம்புக்கல்லுடன் லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வெங்ககல்பட்டி பாலம் அருகே லாரியில் சுண்ணாம்புக்கல் கடத்துவதாக, கரூர் மாவட்ட கனிமவளத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கனிமவளத்துறை உதவி புவியியலாளர் இளங்கோவன், தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதன்பேரில், வெங்கல்பட்டியில் நேற்று முன்தினம் சோதனை நடத்தியபோது, அப்பகுதியில், 25 டன் சுண்ணாம்புக்கல்லுடன் டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும், லாரி டிரைவர் கார்த்திக், தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, போலீசார் விசாரித்-து வருகின்றனர். மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர், ஜன. 13-
கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இதில், மக்கள் நலன் கருதி 1,300க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் காலி பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். 39 நகர்ப்புற மருந்தாளுனர் பணி வரன்முறை செய்திட வேண்டும். நோயாளி எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மாநகராட்சி அலுவலகத்தில்
சமத்துவ பொங்கல் விழா
கரூர், ஜன. 13-
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, மேயர் கவிதா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில், மண் பானைகளில் பொங்கலிடப்பட்டது. தொடர்ந்து, சூரியனுக்கு பொங்கல் படைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, பெண் கவுன்சிலர்கள், ஊழியர்கள், துாய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி அலுவலகம் முன் கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதேபோல், சி.எஸ்.ஐ., விளையாட்டு மைதானத்தில் ஓட்ட பந்தயம், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில், மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா,
சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரயில்வே ஸ்டேஷன் செயல்பாடுகள்
மாணவர்களுக்கு விளக்கம்
கரூர், ஜன. 13-
கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே ஸ்டேஷன் செயல்பாடுகள் குறித்து நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அன்றாட செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக, தனியார் பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதில், ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் மூர்த்தி பாண்டமங்கலம், மாணவ மாணவியருக்கு, ரயில்வே ஸ்டேஷன் நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். ரயில் முன்பதிவு, வருகை அறிவிப்பு, தாமத நிலை அறிவிப்பு, ரயில் நிலைய பராமரிப்பு, ரயில்வே சிக்னல் இயங்கும் விதம் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கும் ரயில்வே ஊழியர்கள் பதிலளித்தனர்.