ஈரோடு, ஜன. 13-
தோட்டத்துக்குள் அத்து மீறி மரங்களை அடியோடு அகற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக, தி.மு.க., பிரமுகர் மீது, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் மனு தரப்பட்டது.
பெருந்துறை, சிங்காநல்லுார் கிராமம், கோமையன் வலசு ஆவரங்காடு தோட்டம் நடராஜன் மகன் விஜயலட்சுமி, கந்தசாமி மனைவி மல்லிகா ஆகியோர், கூடுதல் எஸ்.பி., பாலமுருகனிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு உரிமையான, 2.75 ஏக்கர் விவசாய நிலத்தில், 80 ஆண்டு பழமையான வேம்பு, பூவரசு, பால மரம், அரச மரம் உள்ளது. எங்கள் நிலம் அருகே பெத்தாம்பாளையம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
நேற்று காலை தி.மு.க., பிரமுகர் தலைமையில் வந்த, 10க்கும் மேற்பட்டோர், தோட்டத்தில் இருந்த மரங்களை பெயர்த்து அப்புறப்படுத்தினர். தட்டிக்கேட்ட எங்கள் இருவரையும், தகாத வார்த்தை பேசினர். அனைத்து மரத்தையும் பிடுங்கி விட்டு, வாழைமரம் மற்றும் வரப்பையும் சேதப்படுத்தினர். கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். தி.மு.க., பிரமுகர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.