கரூர், ஜன. 13-
சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பணியாற்றும் நிறுவனங்கள், விருது பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார், பொதுத் துறை சார்ந்த தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள், சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருவதை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த நிறுவனத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை, நற்சான்றிதழ்களுடன் விருது வழங்கப்படும். இதற்கு, பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், தனி நபர் நிறுவனங்கள், அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவன கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.
ஊரக பகுதிகளில் அந்தந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்குவதற்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும். விவசாயம், கால்நடை, கல்வி, பொது சுகாதாரம், குடிநீர், மழைநீர் சேகரிப்பு, மரபுசாரா எரிசக்தி, வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும். எனவே தகுதி வாய்ந்த நிறுவனங்கள், www.tnrd.tn.gov.in இணையதளத்தில் தகுந்த ஆவணங்களுடன் பிப்., 15.க்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.