விவேகானந்தர் பிறந்தநாளில்
தேசிய இளைஞர் தின விழா
நாமக்கல், ஜன.13-
நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம் மற்றும் நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. நூலகர் செல்வம் வரவேற்றார். வாசகர் வட்டத்தலைவர் மோகன் விழாவுக்குத் தலைமையேற்றார். மாவட்ட நூலக அலுவலர் ரவி, விவேகானந்தர் படத்துக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். வாசகர் வட்டப் பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.
விபத்தில் கட்டட மேஸ்திரி பலி
ப.வேலூர், ஜன. 13--
நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் பெரியசாமி, 70; கட்டட மேஸ்திரி. நேற்று மதியம், 1:00 மணிக்கு பைபாஸ் சாலையில் படமுடிபாளையம் தாலுக்கா அலுவலகம் செல்ல, தன் பஜாஜ் இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்தார். அப்போது ஓசூரில் இருந்து கரூரை நோக்கிச் சென்ற ஹூண்டாய் கார் அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திய ஓசூரை சேர்ந்த சுரேஷ்பாபு,36, மீது வழக்கு பதிவு செய்து ப.வேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாக்கடை வசதியில்லாததால்
சாலையில் செல்லும் கழிவு நீர்
ராசிபுரம், ஜன.13-
ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சியில் சாக்கடை வசதியில்லாததால், கழிவு நீர் சாலையில் செல்கிறது.
ராசிபுரம் கோனேரிப்பட்டியில் இருந்து மோகனூர் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பேளுக்குறிச்சி, சிங்களாந்தபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நகருக்குள் செல்லாமல், புறவழியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் சாலை அகல்படுத்தப்பட்டு வருகிறது. பேளுக்குறிச்சி பகுதியில் புறவழிச்சாலை தொடங்கும் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சாலையிலேயே செல்கிறது. புதிய சாலை அமைக்கும் பணியின்போது கூட இப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வில்லை. தற்போதும் சாலையில் தேங்கி செல்லும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்குளவி கொட்டியதால்
மின்வாரிய ஊழிர்கள் காயம்
ப.வேலூர், ஜன. 13--
ப.வேலூர் பள்ளி சாலையில் நேற்று மின்கம்பங்களில் விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியர்களை செங்குளவிகள் கொட்டியதால், காயம் அடைந்தனர்.
ப.வேலூர் முழுவதுமே மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் வைக்கும் இடமாக மாறி உள்ளது. நேற்று மின் கம்பங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது, விளம்பரப் பலகைகளால் பணி செய்ய முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் தடுமாறினர். அப்போது ஒரு மின் கம்பத்தின் மேல் இருந்த விளம்பர பலகை அகற்றிய போது அதில் கூடு கட்டி இருந்த செங்குளவிகள் மின்சார வாரிய ஊழியர்களை கொட்டியது. மின்சார வாரிய ஊழியர் வரதராஜூ, 40, அவரது உதவியாளர்கள் இரண்டு பேர் செங்குளவி கொட்டியதில் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மாவட்ட கோ கோ குழு போட்டி
அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்
எருமப்பட்டி. ஜன, 13---
நாமக்கல்,கரூர் மாவட்ட அளவில் நடந்த கோ.கோ குழு விளையாட்டு போட்டியில் எருமப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
நாமக்கல், கரூர் மாவட்ட அளவிலான கோ கோ குழு விளையாட்டு போட்டி, பரமத்தி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. போட்டியில், 50க்கும் மேற்பட்ட இரு மாவட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டிக்கு எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அணியும், கரூர் தனியார் பள்ளி அணியும் தகுதி பெற்றது. இரு அணிகளுக்கும் நடந்த இறுதி போட்டியில், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
லட்சுமி நாராயண பெருமாள்
கோவிலில் கருட பஞ்சமி விழா
சேந்தமங்கலம், ஜன. 13-
சேந்தமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருடாத்ரி பக்த குழுவின், 13ம் ஆண்டு கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு, 8,108 மகா தீப அலங்கார விழா நடந்தது.
சேந்தமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஆண்டும் தோறும் கருட பஞ்சமி விழா நடைபெறும். கருடாத்ரி பக்த குழுவின், 13ம் ஆண்டு கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க வேண்டி பக்தர்கள், 8,108 மகா தீப அலங்கார பூஜை செய்தனர். லட்சுமி நாராயண பெருமாள், கருடாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
விபத்தில் வாகன
உரிமையாளர் பலி
பள்ளிபாளையம், ஜன. 13-
வெப்படையில் தனியார் பஸ் மோதி, வாகன உரிமையாளர் பலியானார்.
பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 55; டிராவல்ஸ் நடத்தி வருகிறார். அவர் நேற்று இரவு,7:00 மணிக்கு வெப்படை பகுதியில் பாதரை பிரிவு சாலையில் நடந்து செல்லும் போது, எதிரே சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் மோதியது. இதில் அவர் கீழே விழந்தார்.பஸ்சின் முன் பக்கம் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜல்லிகட்டு போட்டி நடத்த
திருச்செங்கோட்டில் இடம் ஆய்வு
திருச்செங்கோடு, ஜன.13-
திருச்செங்கோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஆனங்கூர் ரோட்டில் சூரியம்பாளையம் ஏரிக்கு மேற்கே30 ஏக்கர் கொண்ட பகுதியை, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில் ஆகியோர் ஆய்வு செய்தனர். மதுராசெந்தில் கூறுகையில், ''திருச்செங்கோட்டில் ஜல்லிகட்டு போட்டி நடத்தப்படாமல் இருந்து வந்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடத்த திட்டமிடபட்டு இடம் தேர்வு செய்து வாடிவாசல் அமைப்பது, காளைகள் வந்து செல்ல இடவசதி ஆகியவை குறித்து ஆய்வு செயதோம்,'' என்றார்.
கிராவல் மண் கடத்திய
டிப்பர் லாரி பறிமுதல்
வெண்ணந்துார், ஜன. 12-
வெண்ணந்துாரை அடுத்த நெ.,3 கொமாரபாளையம் ஊராட்சி, அண்ணாமலைப்பட்டி அருகே உள்ள கோம்பைக்காடு பகுதியிலிருந்து கிராவல் மண் கடத்தலில் சிலர் ஈடுபட்டனர். இதை அறிந்த அப்பகுதியினர் மற்றும் பா.ஜ., ஒன்றிய தலைவர் அருள் தலைமையிலான கட்சியினர், ஆட்டையாம்பட்டி - மல்லுார் நெடுஞ்சாலையில் நெ.,3 கொமாரபாளையம் உயர்நிலைப்பள்ளி அருகே, கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை நேற்று மடக்கிப் பிடித்தனர்.
லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர், வருவாய்த் துறையினர், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, வெண்ணந்துார் போலீசில் ஒப்படைத்தனர். டிப்பர் லாரி உரிமையாளர் தினேஷ்குமார், 33, மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.