நாமக்கல், ஜன.13-
ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்யக்கோரி, 23ம் தேதி மனு அளிக்கும் போராட்டம் நடத்த இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது தமிழகத்தில், லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதங்கள் விதிப்பது அதிகரித்து வருகிறது. முறையாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறிப்பிட்டு போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், என்ன குற்றம் என்று தெரிவிக்காமல், பொதுவான குற்றம் என அபராதம் விதிக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கும், தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. எனவே. இதுபோன்று ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் முறையை உடனடடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பல முறை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். எனவே வரும், 23ம் தேதி காலை, 11:00 மணிக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரிங்களிலும், அந்தந்த லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பில், மாவட்ட எஸ்.பி, போலீஸ் கமிஷனர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.