பள்ளிபாளையம், ஜன. 13-
''காவிரி ஆற்றில் சாய கழிவுநீர் கலந்தால் சம்பந்தப்பட்ட ஆலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிபாளையம் நகராட்சி கமிஷனர் ரேணுகா எச்சரித்தார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் செயல்படும் பெரும்பாலான சாய ஆலைகள், சாய கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெறியேற்றுகின்றன. அதே போல குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்று தண்ணீர் முழுமையாக மாசுடைந்து விட்டதால், இந்த தண்ணீரை பயன்படுத்திய மக்களுக்கும் பல்வேறு நோய்கள், உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
சாய ஆலை கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கததால், பள்ளிபாளையம் நகராட்சிக்கு, தேசிய பாதுகாப்பு தீர்ப்பாயம், 55 லட்சம் அபராதம் விதித்தது. முதல் கட்டமாக கடந்த நவம்பரில், 5 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது, பொது சுத்தகரிப்பு நிலையம் அமைக்க, 10.79 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சாய ஆலை அதிபர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நகராட்சி கமிஷனர் ரேணுகா தலைமையில், நகராட்சி தலைவர் செல்வராஜ் முன்னிலையில் நடந்தது. அதில் பேசிய நகராட்சி கமிஷனர் ரேணுகா, ''சாய ஆலைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, நீர்வளத்துறை சார்பில் பதில் கேட்டு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இனிமேல் சாய கழிவுநீர் ஆற்றில் கலந்தால் சமந்தப்பட்ட சாய ஆலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரித்தார்.
கூட்டத்தில், சாய ஆலை அதிபர் கந்தசாமி பேசுகையில், ''குடியிருப்பு கழிவுநீர் தான் அதிகளவு ஆற்றில் கலக்கிறது. ஒரு சில சாய ஆலைகள் தான் சுத்திகரிப்பு செய்யாமல் தண்ணீர் வெளியேற்றி வருகின்றன. எந்த சாய ஆலைகள் என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டாம். சாய ஆலை சங்கத்தின் சார்பில், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் வாங்கி தரப்பட்டுள்ளது. இதில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.