சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு முதல் 2022, அக்டோபர் வரை சுமார் ரூ.3,657 கோடியே 48 லட்சம் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 20 மாத காலத்தில் இந்த அரசு இமாலய சாதனைகளை செய்துள்ளது. எல்லோர்க்கும் எல்லாம் என்ற திட்டத்தின்படி செயலாற்றி வருகிறோம்.
கவர்னர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. கவர்னரின் உரைக்கு அரசின் சார்பில் நன்றி. தமிழ் காக்க, தமிழர் நலன் காக்க, தமிழரின் மானம் காக்க என்றும் உழைப்பேன்.

கடந்த ஓராண்டு காலத்தில் 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். அதில் 559 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். இந்த ஓராண்டில் தமிழகத்தில் 9 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து மக்களை சந்தித்துள்ளேன்.
இதன்மூலமாக நேரடியாக வழங்கப்பட்ட நலத்திட்டங்களால் ஒரு கோடியே 3 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். இரவு தூக்க நேரம் மட்டுமே எனது ஓய்வாக உள்ளது. பொறுப்பு கூட கூட ஓய்வு குறைந்துவிடும்.
மதம்

நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள், நாத்திகர்கள் என்று சொல்லி கோவில்களை சரியாக பராமரிக்கவில்லை என ஒரு கூட்டம் வீண் வதந்திகளை பரப்பி வருகிறது. நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரானவர்கள்; மதத்திற்கு அல்ல. மக்களின் மத நம்பிக்கையை தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துபவர்களுக்கு தான் நாங்கள் எதிரிகள். கடந்த 2021, மே மாதம் முதல் 2022ம் ஆண்டு அக்டோபர் வரை சுமார் ரூ.3,657 கோடியே 48 லட்சம் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உண்மையான பக்தர்கள் இதை போற்றி வருகின்றனர். ஆனால், போலியான கபடவேடதாரிகள் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல், தூற்றி வருகின்றனர். அனைத்து கோவில்களும் புத்துயிர் பெறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. குற்றச்சாட்டு சொல்பவர்கள் ஆதாரங்களுடன் சொல்ல வேண்டும். எ
ங்கள் ஆட்சியில் மதக்கலவரம், சாதி கலவரம் நடந்துள்ளதா?, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதா? நெஞ்சை உலுக்கும் பொள்ளாச்சி சம்பவமும், மர்மத்தின் உச்சமாக கருதப்படும் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவமும் யாருடைய ஆட்சியில் நடைபெற்றது என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

எங்கள் ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு கைது செய்யாமல் இருந்துள்ளார்களா? போலீசார் அவர்களுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். மதவாதம், இனவாதம், பயங்கரவாத சக்திகளை இந்த அரசு ஒருபோதும் வளரவிடாது.
எந்தவொரு வன்முறையும் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும். தமிழகத்தில், 2024ம் ஆண்டு ஜன.,10, 11 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.