நாமக்கல், ஜன.13-
நாமக்கல் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது.
பொங்கல் பண்டிகை நாளை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. காப்பு கட்டுவதற்கு பூலாப்பூ, ஆவாரம்பூ, வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வீடு, காடு உள்ளிட்ட இடங்களில் வைப்பது வழக்கம். நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு இவைகள் கிடைக்காது என்பதால், கிராமங்களில் இருந்து ஆவராம் பூ, பூலாப்பூ ஆகியவற்றை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதன் விற்பனை நேற்று தொடங்கியது.
ஆவாரம் பூ கட்டு, 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பூலாப்பூ கிடைப்பது அரிதாக இருப்பதால் நாமக்கல்லில் நேற்று பூலாப்பூ கிடைக்கவில்லை. ஆவாரம்பூ மட்டுமே வாங்கி சென்றனர். அதே போல், 3 கரும்பு, 100 ரூபாய் முதல் விற்பனையானது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சாலையில் கரும்பு விற்பனை சூடு பிடித்துள்ளது. மேலும் பொங்கல் வைப்பதற்கான அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் கன ஜோராக நடந்தது.