வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ‛தமிழ்நாடு என்று சொன்னால் திராவிட நாடு என்றனர்; இப்போது நாங்கள் தமிழகம் என்று சொன்னதும் தமிழ்நாடு என்கின்றனர். இது தான் எங்கள் மாஸ்டர் பிளான்' என சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியுள்ளார்.
தமிழக கவர்னர் ரவி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‛தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பதே சரி' எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு என குறிப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். மேலும், சட்டசபையில் கவர்னர் தனது உரையில் ‛திராவிட மாடல், அமைதி பூங்கா' உள்ளிட்ட சில வார்த்தைகளை குறிப்பிடாமல் தவிர்த்தார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் கவர்னர் மீது தனித்தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது கவர்னர் ரவி திடீரென சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
இது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பிய நிலையில், சினிமா ஸ்டன்ட் மாஸ்டரும், ஹிந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலருமான கனல் கண்ணன் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கவர்னரை கேவலப்படுத்தும் இந்த அரசு நல்ல அரசா? தமிழை வளர்க்கிறேன் என்று சொல்கிறவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? கவர்னர் தமிழை அழகாக பிரபலப்படுத்தி பாடும்போது சபாநாயகர் கத்துங்கள், கத்துங்கள் என சிக்னல் கொடுக்கிறார். இதெல்லாம் எவ்வளவு கொடுமையான விஷயம்!

வெளியேற்ற வேண்டும் என பிளான் பண்ணி, ஒரு பேப்பரை தயார் செய்து வைத்திருக்கின்றனர்; கேட்டால் தீர்மானம் என்கின்றனர். தீர்மானம் என்ற அச்சிடப்பட்ட பேப்பர் முன்பே வந்துவிடுமா? இது தமிழ்நாடு மட்டுமல்ல ஹிந்து நாடு. இது திராவிட மண் அல்ல. தமிழக போலீஸ், தமிழக முதல்வர் என்று இதற்கு முன்பு சொன்னதில்லையா?
ஒரத்த நாடு, வல்ல நாடு என்பது போன்ற ஊர்கள் எல்லாம் இருக்கின்றது. அவையனைத்தும் தனி நாடு ஆகிவிடுமா? நாங்கள் தமிழ்நாடு என்று சொன்னால் நீங்கள் திராவிட நாடு எனச் சொல்லுவீர்கள். நாங்கள் தமிழகம் எனச் சொன்னால் நீங்கள் தமிழ்நாடு என்று சொல்லிவிட்டீர்கள். இதுதான் எங்கள் மாஸ்டர் பிளான். இவ்வாறு அவர் கூறினார்.