வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சேது சமுத்திர திட்டத்தால் பொருளாதார ரீதியாக பலனில்லை. அதனை தமிழக பா.ஜ., எதிர்க்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: சேது சமுத்திர திட்டத்தை பாஜ., எதிர்க்கிறது. தற்போதைய திட்டப்படி சேது சமுத்திர திட்டத்தை பா.ஜ., ஆதரிக்காது. அப்படியே செயல்படுத்தினால், சூழலியல் பேரிடர் ஏற்படும்.
சேது சமுத்திர திட்டத்தால், இரண்டு பேர் மட்டுமே பயன்பெறுவார்கள். ஒருவர் டி.ஆர்.பாலு. இவர் கப்பல் நிறுவனம் நடத்தி வருகிறார். மற்றொருவர் கனிமொழி. இவர் நடத்தும் நிறுவனம் ஒன்றிடம் கப்பல் உள்ளது. இரண்டு பேரை தவிர, மீனவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் எந்த பயனும் இல்லை.
சட்டசபையில் முதல்வர் மோசடி தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். முழு பூசணிக்காயை மறைப்பது போல், பொய்யை முதல்வர் மறைத்துள்ளார். இந்த திட்டம் அரசியல் காரணங்களுக்காக தள்ளி போடப்பட்டுள்ளதாக தீர்மானத்தில் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்திலேயே வேண்டாம் என கூறிய பிறகு எப்படி அரசியல் காரணம் என கூற முடியும். சேது சமுத்திர திட்டம், தமிழகம், இந்தியாவிற்கு பயன் அளிக்காது என ஆர்கே பச்சோரி குழு கூறியுள்ளது. இந்த குழு அறிக்கையை ஸ்டாலின் படிக்க வேண்டும். ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் ஆண்டுக்கு 12 சதவீதம் வருவாய கிடைக்க வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் அதற்கு வாய்ப்பு இல்லை.

சேது சமுத்திர திட்டம் மூலம் தமிழக மக்களுக்கு எந்த வகையிலும் பொருளாதார பலன் இல்லை. சுனாமி தாக்கிய போதும், தமிழகம் பாதிக்கப்படாமல் இருந்ததற்கு சேது சமுத்திர பாலமும் காரணம். 2 நபர்கள் நடத்தும் கப்பல் நிறுவனத்திற்கு தான் லாபம். இதனை தெளிவுபடுத்தாமல் தீர்மானம் கொண்டு வந்து குழப்பி உள்ளார்.
2வது பொய். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ராமர் சேது தொன்படவில்லை என கூறியுள்ளார் எனக்கூறியது பொய். இது தொடர்பாக ராமர் சேது பாலம் உண்மையா என எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும் போது, ராமர் சேது இருந்ததா என்ற கேள்விக்கு தெளிவான பதில் கிடையாது. 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்ட பாலம், இந்த நேரத்தில் இருக்கு; இல்லை என உறுதிபடுத்தவில்லை. அங்கு கட்டமைப்பு உள்ளது என்பது தெரியவருகிறது என்றார்.
அதில் ஒரு வரியை மட்டும் எடுத்து தீர்மானத்தில் வைத்திருப்பது தவறு.இதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். தற்போதைய திட்டப்படி பெரிய கப்பல்கள் அந்த பாதையில் வராது. அனைத்து கேள்விகளுக்கும் ஸ்டாலின் தெளிவாக பதில் சொல்ல வேண்டும்.
இது அவரது கடமை. இந்த தீர்மானத்தை கொண்டு வந்து மக்களை குழப்பி உள்ளனர். ஜிதேந்திர சிங்கின் பதிலில் ஒரு வரியை மட்டும் எடுத்தது ஏன் என்பதற்கும், அரசியல் காரணங்களுக்காக என கூறியதற்கும் விளக்கம் அளிப்பதுடன், ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.