வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கூடலூர்: கர்நாடகாவில் இருந்து, கேரளாவுக்கு கடத்த முயன்ற, 39.84 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை கூடலூர் போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வழியாக, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலூர் டி.எஸ்.பி. , மகேஷ்குமார் உத்தரவுபடி , இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் போலீசார் நேற்று, இரவு மைசூரு தேசிய நெடுஞ்சாலை தொரப்பள்ளி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
கர்நாடகாவில் இருந்து பிஸ்கட் பெட்டிகளை ஏற்றி வந்த, ஈச்சர் லாரியை சோதனை செய்தபோது, அதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்களை, கேரளா மாநிலம் மன்னார்காடு பகுதிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. லாரியுடன், 64 மூட்டைகளில் 5538 பண்டல்களில் கடத்தி வந்த 39 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். கேரளா மாநிலம் பாலக்காடு மன்னார்காடு பகுதியில் சேர்ந்த சுதீர், 43, என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.