-நமது நிருபர் குழு-
தைத்திருநாளை வரவேற்கும் வகையில், கோவை ஊரக பகுதிகளில்பள்ளி, கல்லுாரிகள், ஊராட்சி அலுவலகங்களில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பி.ஜி.வி., பள்ளி
சின்னதடாகம் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, விழாவில் பங்கேற்றனர்.
பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படைத்து வழிபட்டனர். மழலைகளின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. மாணவர்கள் நடத்திய நாடகத்தில் கிராம விளையாட்டுக்கள், மாடுபிடித்தல், இளவட்டக்கல் துாக்குதல் போன்றவை இடம்பெற்றன. பட்டிமன்றம் நடந்தது. ஆசிரியைகளின் கும்மி ஆட்டத்துடன் விழா நிறைவு பெற்றது.
மனித வள மேம்பாட்டு மையம்
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித வள மேம்பாட்டு மையத்தில் தையல் பயிற்சி பெறும் பெண்கள் ஒருங்கிணைந்து பொங்கல் விழா நடத்தினர்.
பயிற்சியாளர் சுமதி வரவேற்றார். கும்மி, பாட்டு உள்ளிட்ட போட்டிகள் மற்றும் விழா காலத்தின் போது உடல் ஆரோக்கியம் மேம்படும் வழிகள் என்பது குறித்த கருத்தரங்கமும் நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி மைய இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.
சமத்துவ பொங்கல்
அசோகபுரம் ஊராட்சி சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், ஊராட்சி தலைவர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் கார்த்தி, துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்ஆர்.வி., கல்லுாரி
காரமடை டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரியில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார்.
மாணவர்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுத்தல், பலுான் உடைத்தல், முறுக்கு கடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கல்லுாரி நிர்வாக மேலாளர் சீனிவாசன், அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கல்லுாரி
சிறுமுகை அடுத்த எலகம்பாளையத்தில், கோவை எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள், பொங்கல் விழாவை கொண்டாடினர்.
விழாவில் பசுமாடுகளுக்கு பொட்டு வைத்து, சீர்வரிசை செய்தனர். விவசாயிகளுக்கு மரியாதை செய்யும் வகையில், புத்தாடைகளை வழங்கி, காலில் விழுந்து வணங்கினர். ஊர் பொதுமக்களும், கல்லுாரி மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில், சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள் வடிவு, எஸ்.என். எஸ். கல்லுாரி நிறுவனங்களின் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மருதுார் ஊராட்சி
மருதுார் ஊராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு ரங்கோலி போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் தலைவர் பூர்ணிமா, துணைத்தலைவர் தேன்மொழி, ஊராட்சி செயலர் பிரபு, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் குழுவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜடையம்பாளையம் ஊராட்சி
சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம் ஊராட்சியில், சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அலுவலகம் முன் மகளிர் குழுவினர் பொங்கல் வைத்தனர்.
ஊராட்சி தலைவர் பழனிசாமி, காரமடை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஒ., கோபால், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட உதவி இயக்குனர் ஜெகதீசன் ஆகியோர் பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.
பின் கோலப் போட்டிகள் நடத்தி மகளிர் குழுவிற்கு பரிசுகளை வழங்கினர்.
அன்னுார்குன்னத்துார் ஊராட்சி
அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சிகளிலும், நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. குன்னத்துார் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் கீதா தலைமையில் விழா நடந்தது.
விழாவில் அரசு துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெண்கள் கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், துாய்மைப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
சுகப்பிரம்மா மகரிஷி வித்யாலயம் பள்ளி
சூலுார் அடுத்த பாப்பம்பட்டி, சுகப்பிரம்மா மகரிஷி வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் வைத்தியநாதன் முன்னிலையில், ஆசிரியைகள் வழிகாட்ட, மாணவ, மாணவியர் பொங்கல் வைத்தனர்.
தமிழர் பாரம்பரியம், பண்பாடு, பொங்கல் விழா கொண்டாடுவதன் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது.
முதல்வர் வனிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.