பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சார்பில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி, தேசிய இளைஞர் தினம் கிராமங்களில் கொண்டாடப்பட்டது.
இங்குள்ள விவேகானந்தர் பூங்காவில் நடந்த விழாவுக்கு வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். சுவாமி விவேகானந்தர் அமைப்பினை சேர்ந்த சிறுவர்கள், சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகளை கூறினர்.
தொடர்ந்து, சுவாமிஜிகள், பிரம்மச்சாரிகள், வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் ஒன்று திரண்டு தேசிய இளைஞர் தின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அறிவொளி நகர், தெக்குபாளையம், சிறுமுகை, லிங்காபுரம் பகுதிகளில் தேசிய இளைஞர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கிராமங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. குழந்தைகளுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
சாமிசெட்டிபாளையத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியும், தேசிய இளைஞர் தினத்துக்கான உறுதிமொழி நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், கூடலுார் நகராட்சி தலைவர் அறிவரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.