புதுடில்லி:'டாடா அறக்கட்டளை'யின் தலைவராக இருக்கும் ரத்தன் டாடா, தற்போது புதிதாக, நன்கொடை அறக்கட்டளை ஒன்றை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
இது குறித்து, அவருக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் உள்ள ஒருவர் கூறியதாவது:
'டாடா டிரஸ்ட்' தலைவராக இருக்கும் ரத்தன் டாடா, நீண்ட காலமாக, தன் சொந்தப் பணத்தில், பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு தனிப்பட்ட முறையில், குறிப்பிட்ட அளவில் சொத்துக்களைச் சேர்ந்துள்ளார்.
இந்த சொத்துக்களின் வழியாக கிடைக்கும் வருமானத்தை, தன்னுடைய மறைவுக்குப் பின், பிறருக்கு உதவும் வகையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக ரத்தன் டாடா, ஒரு தனிப்பட்ட அறக்கட்டளை அமைப்பை உருவாக்கிஉள்ளார்.
இந்த அறக்கட்டளை வாயிலாக, எதிர்காலத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு உதவக்கூடும் என தெரிகிறது. கடந்த செப்டம்பரில் இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டு உள்ளது. இதற்கு இரு இயக்குனர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ரத்தன் டாடாவின் இந்த அறக்கட்டளை, எந்தவித முதலீட்டிலும் ஈடுபடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.