பராமரிப்பில்லாத அலுவலகம்
பழநி ரோட்டில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அலுவலகம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. அங்கு, செடிகள், புதர்கள் நிறைந்துள்ளது. இதனால், விஷ ஜந்துகள் அதிக அளவில் வசிக்கின்றன. எனவே, இந்த அலுவலகத்தை பராமரித்து, செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவராஜ், உடுமலை.
பணிகளை விரைவுபடுத்தணும்
தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீ நகர் சந்திப்பில், கழுத்தறுத்தான் பள்ளத்தில் உள்ள தரைமட்டப்பாலம் அகற்றப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. பணி மெதுவாக நடைபெறுவதால், தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசி நோய் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
- கண்ணன், உடுமலை.
வேகத்தடை வேண்டும்
உடுமலை கொழுமம் ரோட்டில், ரயில்வே கேட் பகுதியிலிருந்து, எஸ்.வி.புரம் பஸ் நிறுத்தம் வரை இருசக்க வாகன ஓட்டுனர்கள் அதிவேகத்தில் செல்கின்றனர். அவர்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஊராட்சி அலுவலகம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- மோகன்குமார், எஸ்.வி.புரம், உடுமலை.
கூடுதல் இருக்கை தேவை
உடுமலை பஸ் ஸ்டாண்டில், தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், பொதுமக்கள் வருகை தருகின்றனர். ஆனால் அவர்கள் அமர்வதற்கு தேவையான போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால், அவர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டியதுள்ளது. எனவே, கூடுதல் இருக்கைகளை நகராட்சியினர் அமைக்க வேண்டும்.
- ராஜா, உடுமலை.
ரோட்டை சீரமைக்கணும்
உடுமலை நகரராட்சி எம்.பி., நகரில் ரோடு மோசமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். விபத்துகளும் அடிக்கடி நடைபெறுகிறது. இந்த ரோட்டை நகராட்சியினர் சீரமைக்க வேண்டும்.
- ராஜ்மோகன், உடுமலை.
விபத்து அபாயம்
தேசிய நெடுஞ்சாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாப் உள்ளது. இதன் அருகே ரோடு சேதமடைந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. அரசுத்துறைகளும் கண்டு கொள்வதில்லை. இந்த ரோட்டை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.
- குருசாமி, உடுமலை.
செயல்படாத சிக்னல்
உடுமலை அருகே, திருப்பூர் ரோடு சந்திப்பில் சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார், உடுமலை.
கூடுதல் கண்காணிப்பு தேவை
உடுமலை பஸ் ஸ்டாண்டில், பொங்கலுக்காக ஏராளமான வெளியூர் செல்வோர் வருகின்றனர். அப்போது பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. மக்களுக்கும் சிரமங்கள் ஏற்படகிறது.எனவே, கூடுதல் போலீசார் அங்கு நியமித்து கண்காணித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
- முருகன், உடுமலை.
குப்பை எரிப்பு
உடுமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சி அடிவள்ளி நீர்நிலை அருகில் குப்பையை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திக், உடுமலை.
பராமரிப்பில்லாத கழிப்பிடம்
உடுமலை தளி ரோட்டில் சந்தனக்கருப்பனுார் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இக்கழிப்பிடம் பராமரிப்பின்றி பயன்படாமல் உள்ளது. இதை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, இக்கழிப்பிடத்தை பராமரித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
- ராமசாமி, உடுமலை.