உடுமலை:உடுமலை நகராட்சி சார்பில், புகையில்லா போகி கொண்டாடும் வகையில், கழிவு பொருட்களை பொதுமக்கள் நகராட்சி வசம் ஒப்படைக்க சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை பகுதிகளில், பொங்கல் பண்டிகை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
அறுவடைத்திருநாளை வரவேற்கும் வகையில், ஆவாரம்பூ, பூளைப்பூ ஆகியவற்றை கொண்டு, பொது இடங்கள், வீடுகளில் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி, இன்று நடக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள், பழையன கழிதல், புதியன புகுதல் என்கிற வழக்கத்தின் அடையாளமாக, பழைய பொருட்களை எரித்து, போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வீணாக உள்ள, பழைய துணி, பிளாஸ்டிக் கழிவுகள், டயர் உள்ளிட்டவை எரிக்கப்படுவதால், வெளியேறும் புகையால் காற்று மாசு ஏற்படுகிறது.
இதனால், மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
நச்சு புகையால், வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, சுவாசிக்கும் காற்றில் நச்சு பொருட்களின் அளவு அதிகரிக்கிறது.
இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவில், இயற்கையை காக்கும் வகையில், 'புகையில்லா போகி' கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று, கொண்டாடப்படும் போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்காமல், அப்புறப்படுத்தும் வகையில், உடுமலை நகராட்சி சார்பில், கழிவுகள் சேகரிக்கும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தொடர்பு கொள்ள எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தளி ரோடு அலுவலகம், 99767 60593 ; பஸ் ஸ்டாண்ட், 93456 33015; பழநி ரோடு அலுவலகம், 97883 24002 ; சர்தார் ரோடு அலுவலகம், 70104 90363; தில்லை நகர் அலுவலகம், 97883 23966, ஆகிய 5 மையங்களில், பழைய துணி, டயர், ரப்பர், பிளாஸ்டிக், பழைய ஒயர்கள் என உபயோகமற்ற பொருட்களை பொதுமக்கள் கொண்டு வந்து கொடுக்கலாம்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
போகி பண்டிகையன்று, பழைய பொருட்களை எரிப்பதால், காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில், ''புகை நமக்கு பகை; புகையில்லா போகி நமக்கு பெருமை'' என்ற தலைப்பில், பழைய பொருட்கள், உடுமலை நகராட்சி பகுதிகளில், 5 மையங்களில் சேகரிக்கப்படுகிறது. காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை இம்மையங்கள் செயல்படும். எனவே, பொதுமக்கள் தேவையற்ற பொருட்களை, சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் எரிக்காமல், கழிவுகள் சேகரிக்கும் மையங்களில் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத, பொங்கல் பண்டிகை கொண்டாடுவோம்.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.