உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் பொங்கல் பண்டிகை உணவில், அரசாணிக்காய், மொச்சை என பல காய்கறிகள் இடம் பெறுவதால், காய்கறிகள் பிரதானமாக உள்ளது.
இதனால், உடுமலை நகராட்சி சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்ததோடு, விலையும் உயர்ந்து காணப்பட்டது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில் விளையும், தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள், உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
வழக்கமாக, 210 டன் காய்கறிகள் வரத்து காணப்படும் நிலையில், நேற்று, 300 டன் காய்கறிகள் வரத்து காணப்பட்டது.
இதில், தக்காளி, சின்ன வெங்காயம், அரசாணிக்காய், மொச்சை என பொங்கல் பண்டிகைக்கு பிரதான தேவையான காய்கறிகள் விற்பனை அமோகமாக நடந்தது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் விற்பனை என்பதால், நேற்று உடுமலை சந்தைக்கு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகையும் அதிகளவு காணப்பட்டது.
உடுமலை சந்தைக்கு காய்கறி வரத்தில் பிரதானமாக தக்காளி உள்ளது. தக்காளி வரத்து அதிகளவு காணப்பட்ட நிலையில், கடந்த சில வாரமாக, 14 கிலோ கொண்ட பெட்டி, 300 ரூபாய் வரை ஏலம்போனது. நேற்று, தேவை அதிகரிப்பு காரணமாக, ஒரு பெட்டி, 500 ரூபாய் வரை விற்பனையானது. 22 கிலோ கத்தரி மூட்டை, 400 ரூபாய் வரை விற்ற நிலையில், நேற்று, 600 ரூபாய்க்கு விற்றது.
45 கிலோ கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை, 1,200 ரூபாய் வரை விற்ற நிலையில், நேற்று, 1,650 ரூபாய்க்கு விற்றது. அதே போல், மற்ற காய்கறிகள் விலையும், கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது.
பொங்கல் பண்டிகையின் பிரதான காய்கறிகளான, மொச்சை கிலோ, 80 ரூபாய் வரை கடந்த வாரம் விற்ற நிலையில், நேற்று, 120 ரூபாய்க்கும், அரசாணிக்காய், கிலோ, 5 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 10 ரூபாயாக உயர்ந்தது. ரூ.15க்கு விற்ற அவரை, நேற்று ரூ.35 விற்றது.
அதே போல், வெண்டை கிலோ, ரூ.80, பொரியல் தட்டை, ரூ.30, கேரட், ரூ.35-60, பீன்ஸ், ரூ.60, வாழைக்காய், ரூ.30, முட்டைக்கோஸ், ரூ.10, மாங்காய், ரூ.70, காய்கறிகளில் உச்ச விலையாக, முருங்கை கிலோ, ரூ.140 ரூபாய்க்கும் விற்றது.
புடலங்காய், கிலோ, ரூ.15, சுரைக்காய், ரூ.20, பாவக்காய், ரூ.40, சின்ன வெங்காயம், ரூ. 80, பெரிய வெங்காயம், ரூ.28, சேனைக்கிழங்கு, ரூ.70, பச்சை மிளகாய், 36, பீட்ரூட், ரூ. 25 என காய்கறிகள் விலை உயர்ந்து காணப்பட்டது.
உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து, காய்கறிகள் கொள்முதல் செய்தனர்.
உழவர் சந்தை
உடுமலை உழவர் சந்தைக்கு, வழக்கமாக, 20 முதல், 25 டன் காய்கறி வரத்து காணப்படும் நிலையில், நேற்று, 30 டன் காய்கறிகளும், வாழை உள்ளிட்ட பழங்கள், 880 கிலோ வரத்து காணப்பட்டது.
சராசரியாக, 2,500 நுகர்வோர் வரத்து இருக்கும் நிலையில், நேற்று, 3,339 பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வந்திருந்தனர். 80 விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வந்திருந்தனர். நேற்று ஒரே நாளில், 8 லட்சத்து, 6 ஆயிரத்து, 210 ரூபாய்க்கு காய்கறிகள் விற்றன.