சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், சிறுதாவூர் ஏரியில், சுற்றுச்சூழல் அனுமதியின்றி, 1 மீட்டர் ஆழத்திற்கு அதிகமாக மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என, சிறுதாவூர் கிராம ஊராட்சித் தலைவர் அருள், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த தீர்ப்பாயம், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீர்வளத் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
சிறுதாவூர் ஏரியில் இருந்து மண்ணை எடுப்பதற்கு, சுற்றுச்சூழல் அனுமதி தேவையா? என்பது குறித்து, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
'சிறுதாவூர் ஏரியின் பரப்பளவு 572 ஏக்கர். ஆனால், மூன்றரை ஏக்கரில் மட்டும் மண்ணை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என, செங்கல்பட்டு கலெக்டர் குறிப்பிட்டுள்ளார்.
மழை நீரை சேமிக்க, நீர் மேலாண்மைக்காக என்றால், ஏரி முழுதையும் துார் வார வேண்டும். மாறாக, ஏரியின் சிறு பகுதியை மட்டும் துார் வார அனுமதித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
இதுதொடர்பாக நீர்வளத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும், செங்கல்பட்டு கலெக்டரும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 15-ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement