செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நல்லுார், விராலுார், அம்மனுார், புத்துார் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல ஆண்டுகளாக மண்பானை, சட்டி, இதர மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தைத் திருநாளை முன்னிட்டு ஒரு மாதமாக பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தயாரிக்கப்பட்ட பானைகளை செய்யூர் சந்தை வீதியில் விற்பனை செய்து வருகின்றனர்.
மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:
மண்பானை தயாரிப்பதற்கு பயன்படும் களிமண் தட்டுப்பாடு உள்ளது. மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலமாக, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, ஏரிகளில் மண் எடுத்து மண்பாண்டங்கள் செய்கிறோம்.
கடந்த ஆண்டை விட பானைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு, சிறிய பானை 50 ரூபாய்க்கும் மற்றும் அளவுக்கு ஏற்றபடி 100, 150, 250 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.
மண் அடுப்பு 150 முதல் 200 ரூபாய் வரையும், மண் சட்டி 70 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.