மறைமலை நகர்:மறைமலை நகர், திருவள்ளுவர் சாலையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
இந்த குழந்தைகளுக்கு, காலை சிற்றுண்டி வழங்குவதற்காக, நகராட்சி சார்பில், பள்ளி வளாகத்தில் சமையல் கூடம், கடந்த செப்டம்பர் மாதம் கட்டி திறக்கப்பட்டது.
சமையல் கூட கட்டுமானப் பணிகள் நடந்த போது, நுழைவாயிலில் இருந்த இரும்பு 'கேட்' இடையூறாக இருந்ததால் அகற்றப்பட்டது.
தற்போது, கட்டுமானப் பணிகள் முடிந்து, பல மாதங்கள் கடந்தும், 'கேட்' மீண்டும் அமைக்காமல், இருபுறமும் துாண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு, பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இது குறித்து, குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது:
பள்ளி நுழைவு வாயில் திறந்தே இருப்பதால், குழந்தைகள் வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் செல்லும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில், சிலர் உள்ளே அத்துமீறி நுழைகின்றனர்.
எனவே, விரைந்து கட்டுமானப் பணிகள் முடித்து, இரும்பு 'கேட்' அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, நகராட்சி அதிகாரி கூறியதாவது:
பள்ளி நுழைவு வாயிலில், துாண்கள் அமைக்கப்பட்டு, பெரிய வாகனங்கள் உள்ளே சென்று வரும் வகையில், 'கேட்' அமைக்க பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.