மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் முடங்கிய, சுற்றுலா வாகன கட்டண வசூல், மீண்டும் நேற்று முதல் துவக்கப்பட்டது.
மாமல்லபுரத்தில், சுற்றுலா வாகனங்களுக்கு, பேரூராட்சி நிர்வாகம், நுழைவுக் கட்டணம்; உள்ளூர் திட்டக் குழுமம், சிற்பப் பகுதிகளில் நிறுத்துமிட கட்டணம் வசூலிக்கின்றன.
இவ்விரு கட்டணங்களை சேர்த்து வசூலிக்க, பேரூராட்சி நிர்வாகம், பொது ஏலம் நடத்தி, தனியாரிடம் உரிமம் வழங்கும். கடந்த செப்.,1 முதல், மார்ச் 31 வரை, கட்டணம் வசூலிக்க, ஆகஸ்டில் பொது ஏலம் நடத்தி, 94 லட்சம் ரூபாய்க்கு, தனியாரிடம் ஏலம் விட்டது.
இந்நிலையில், சுற்றுலா பயணியரிடம், பலமுனை கட்டண வசூலிப்பால், பயணியர் பாதிக்கப்படுவதாக, அமைச்சர் அன்பரசன் அதிருப்தி தெரிவித்ததால், நகராட்சி நிர்வாக அமைச்சர் நேரு, இக்கட்டண வசூல் உரிம ஏலத்தை நிறுத்த, பேரூராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார்.
அதற்கு முன்பே, ஏலத்தில் விட்டதால், குத்தகை உரிமதாரருக்கு, வசூல் உரிமம் வழங்குவதா? அல்லது ஏலத்தையே ரத்து செய்வதா? என, பேரூராட்சி நிர்வாகம் குழம்பியது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இச்சூழலில், நிர்வாகம், கட்டணம் வசூலிக்கும் அனுமதிக்கு, நீதிமன்ற உத்தரவு பெறுமாறு, உரிமதாரருக்கு ஆலோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நுழைவிடத்தில் மட்டுமே, கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலையில், நிறுத்துமிட பகுதிகளிலும், உரிம தரப்பினர் அடாவடி கட்டணம் வசூலித்தனர்.
ஜன., 8ல், உள்ளூர் மீனவ நபரிடம், வாகன கட்டணம் கேட்டு ஏற்பட்ட தகராறில், உரிம தரப்பினர், அவரை சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து, அவரது உறவினர்கள் முற்றுகையிட்ட நிலையில், அவர்கள் கட்டண வசூலிப்பை கைவிட்டு தப்பினர். தாக்குதல் குறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடமும் முறையிடப்பட்டது.
நான்கு நாட்களாக, கட்டண வசூல் இன்றி, சுற்றுலா வாகனங்கள் இலவசமாக கடந்தன.
தற்போது, உரிமதாரர், மாவட்ட நிர்வாகம், பேரூராட்சிகள் இயக்குநரகம், தி.மு.க., பிரமுகர்கள் என ஆலோசித்ததாக தெரிகிறது.
நேற்று முதல், மீண்டும் கட்டண வசூல் துவக்கப்பட்டது.