செங்கல்பட்டு:மாவட்டத்தில், தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்ற, விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, விவசாயிகள் சாகுபடிக்கு உகந்த தங்கள் தரிசு மற்றும் இதர தரிசு நிலங்களை, தாமாகவே முன்வந்து உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம். விருப்பமுள்ள விவசாயிகள் தகுந்த ஆவணங்களான ஆதார், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு நகல் ஆகியவற்றுடன், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பருவத்திற்கு ஏற்றாற்போல, விவசாயிகள் உளுந்து அல்லது எண்ணெய் வித்து பயிர்கள் என, விருப்பத்திற்கு ஏற்ப பயிரிடலாம். அதற்கான விதை, உயிர் உரம், நுண்ணுாட்டக்கலவை, உயிரியல் உரங்கள் போன்ற இடுபொருட்கள் மானிய விலையில், வேளாண் விரிக்க மையங்களில் வழங்கப்படுகிறது.
ஒரு ஹெக்டேர் உளுந்து, எள் பயிர்களுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் மானியமாகவும், மணிலாவிற்கு 22 ஆயிரத்து 900 ரூபாய் மானியமாகவும் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சம் இரண்டு ஹெக்டேர் வரை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.