''கோஷ்டிப் பூசல் காரணமா, விளையாட்டு போட்டியை புறக்கணிச்சிட்டார் ஓய்...'' என, 'பில்டர்' காபியை அருந்தியபடியே பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''விபரமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தேனி மாவட்டத்துல, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், மாவட்டச் செயலருமான கம்பம் ராமகிருஷ்ணன் ஒரு கோஷ்டியாகவும், 'மாஜி' மாவட்டச் செயலர் தேனி ஜெயகுமார், இன்னொரு கோஷ்டியாகவும் செயல்பட்டுண்டு இருக்கா ஓய்...
''தேனி, கோம்பையில, மாநில அளவிலான மாரத்தான் போட்டி சமீபத்துல நடந்துது... இதுல ஜெயிச்சவாளுக்கு, தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகுவும், தேனி ஜெயகுமாரும் பரிசு வழங்கினா ஓய்...
''இந்த நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ., கம்பம் ராமகிருஷ்ணனை சிறப்பு அழைப்பாளரா அழைச்சிருந்தா... ஆனா, மாவட்ட செயலர் தேர்தல்ல தேனி ஜெயகுமார், தனக்கு எதிரா போட்டியிட்ட ஒரே காரணத்துக்காக, கம்பம் ராமகிருஷ்ணன் விழாவை புறக்கணிச்சிட்டார்...
''விளையாட்டு துறை அமைச்சரா உதயநிதி இருக்கற நேரத்துல, விளையாட்டு போட்டியை எம்.எல்.ஏ., புறக்கணிக்கலாமான்னு, ஜெயகுமாருக்கு கட்சிக்காரா துாபம் போட்டுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பதவி உயர்வு கிடைச்சும் பிரயோஜனம் இல்லாம போயிட்டேன்னு விரக்தியில இருக்காவ...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தமிழகத்துல, எஸ்.ஐ.,க்களுக்கு இன்ஸ்பெக்டரா பதவி உயர்வு குடுத்து, மூணு மாசத்துக்கு முன்ன அரசு பட்டியல் வெளியிட்டுச்சு... மொத்தம், 199 பேருக்கு பதவி உயர்வு குடுத்தாவ வே...
''இவங்க எல்லாருக்கும் ஒரு மாசத்துக்கு முன்னால பயிற்சியும் முடிஞ்சிடுது... பணியிடங்கள் காலியா இருந்தும், பதவி உயர்வு பெற்ற எஸ்.ஐ.,க்களுக்கு இன்னும், 'போஸ்டிங்' போடல வே...
''இன்ஸ்பெக்டரா பதவி உயர்வு கிடைச்சும் இன்னும், எஸ்.ஐ.,யாவே வேலை பார்க்கிறோம்னு சம்பந்தப்பட்டவங்க புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பொங்கல் பரிசு இல்லாததால, நட்சத்திர பேச்சாளர்கள், 'அப்செட்'ல இருக்காங்க...'' என, கடைசி தகவலை சொன்னார் அந்தோணிசாமி. ''எந்தக் கட்சியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''அ.தி.மு.க.,வுல தாங்க... அந்தக் கட்சியில தான் நடிகர்கள், இயக்குனர்கள்னு ஏராளமான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டாளம் இருக்குதுங்க... ஜெயலலிதா இருந்தவரை, அவங்களுக்கு பொங்கல் பரிசா, 50 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை கொடுத்து குஷிப்படுத்திடுவாங்க...
''அந்தம்மா மறைவுக்கு அப்புறம், 50 ஆயிரம் ரூபாய் குடுத்துட்டு இருந்தாங்க... பழனிசாமி - பன்னீர் செல்வம் லடாய்க்கு பிறகு, பழனிசாமி தரப்பு போன வருஷம், 25 ஆயிரம் ரூபாய் குடுத்தாங்க...
''இந்த வருஷம் சத்தத்தையே காணோம்... துட்டு தேறுமா, தேறாதான்னு பேச்சாளர்கள் கவலையில இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு சொல்ல போறதோன்னு, பழனிசாமி வயித்துல நெருப்பை கட்டிண்டு இருக்கார்... இந்த நேரத்துல, பொங்கல் பரிசு கேட்டா அடிக்க வந்துடுவார் ஓய்...'' என குப்பண்ணா கூற, மற்றவர்களும் சிரித்தபடியே கிளம்பினர்.