ஜனவரி 14, 1938
தேனி மாவட்டம் பெரியகுளத்தில், பொன்னையா பிள்ளையின் மகனாக, 1938ல், இதே நாளில் பிறந்தவர் சுருளிராஜன். இளமையிலேயே தந்தையை இழந்ததால், பள்ளி படிப்பை பாதியில் விட்டு, மதுரையில் மெக்கானிக்காக வேலை பார்த்தார். அப்போது, 'அமெச்சூர்' நாடகங்களில் நடித்தார். அதில், நல்ல புகழ் கிடைத்ததால், 1959ல் சென்னை வந்து, கருணாநிதியின், 'காகிதப்பூ' நாடகத்தில் நடித்து, தேர்தல் நிதி வசூலித்து தந்தார்.
தொடர்ந்து, இரவும் பகலும் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். காதல் படுத்தும் பாடு, ஆதிபராசக்தி, மாந்தோப்புக் கிளியே, ஒளி பிறந்தது, முரட்டுக்காளை, தாய் மீது சத்தியம், ஆறிலிருந்து அறுபது வரை உள்ளிட்ட படங்களில், நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, வில்லன், குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்ததால், 1970களில், தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகரானார்.
கரகரத்த குரலில் பேசி, நடித்து, ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்த சுருளிராஜன், 1980 டிசம்பர் 5ல், தன், 42வது வயதில், சிறுநீரக பாதிப்பால் மரணம் அடைந்தார். ஒரே ஆண்டில், 50 படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர்; மதுப்பழக்கத்தால் தன் ஆயுளை, 50க்குள் முடித்துக் கொண்டார். இளமையிலேயே வயோதிக வேடங்களை ஏற்று நடித்து, ரசிகர்களின் மனதில், இன்றும் வாழும் சிரிப்பு நடிகரின் பிறந்த தினம் இன்று!