காஞ்சிபுரம்:பொங்கல் பண்டிகையையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து காஞ்சிபுரத்திற்கு பூக்களும், கரும்பு கட்டுகளும், காய்கறிகளும், கொத்து மஞ்சளும் லாரிகளில் வரவழைக்கப்பட்டுள்ளன.
பொங்கலுக்கு தேவையான பொருட்கள் சந்தைகளில் குவிக்கப்பட்டு, விற்பனையும் களைகட்ட துவங்கியுள்ளது.
பூக்கள் விலை அதிகரித்துள்ளதால், கிலோ மல்லிகைப்பூ, 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வாசலில் வண்ண கோலமிடுவதற்கான கலர் பொடிகளும், காஞ்சிபுரத்தில் ரயில்வே சாலை மற்றும் ராஜ வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கருணைக்கிழங்கு, முள்ளங்கி, கத்தரிக்காய், பூசணி, வாழைக்காய், சர்க்கரை வள்ளி உள்ளிட்ட 13 வகை காய்கறிகள் அடங்கிய ஒரு பாக்கெட் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் வைக்கும் சிறிய பானை 80 ரூபாய்க்கும், பெரிய பானை 200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
சில்லரை விலையில் ஒரு கரும்பு 20 ரூபாய்க்கும், மொத்த விலையில் 20 கரும்புகள் உடைய ஒரு கட்டு 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரம் வரை கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட கிலோ பூவன் வாழைப்பழம், நேற்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டாரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 செடிகள் கொண்ட ஒரு கட்டு கொத்து மஞ்சள் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தில் உள்ள நிரந்தர ஜவுளி கடைகளிலும், சீசன் நேர நடைபாதை மற்றும் தற்காலிக ஜவுளி கடைகளிலும் புத்தாடை வியாபாரம் களை கட்டியுள்ளது.
மல்லிகைப்பூ 2,000
முல்லை 1,500
சாமந்தி 150
கனகாம்பரம் 1,200
சம்பங்கி 100
பன்னீர் ரோஜா 140