வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனகிரி:லால்புரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வீட்டு மனைகள் அமைக்க அனுமதிளித்ததை ரத்து செய்யக் கோரி,ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் புவனகிரி ஒன்றிய பீ.டி.ஓ., (வட்டார ஊராட்சி) யை சந்தித்து மனு அளித்ததுடன் பல்வேறு முழக்கமிட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம் லால்புரம் ஊராட்சி சிதம்பரம் நகரப்பகுதியின் அருகில் உள்ளது. இந்த ஊராட்சியில் 6 ஏக்கர் நஞ்சை நிலத்தில், தனியார் ரியல் எஸ்டேட் மூலம் 115 வீட்டு மனைகள் அமைத்துள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்க வில்லை. பீ.டி.ஓ., (திட்டம்) முருகன் தன்னிச்சையாக அனுமதி அளித்துள்ளார். இந்த மனைகளில் அடிப்படை வசதிகள் ஏதும் அமைக்க வில்லை.
இதனால் இந்த அனுமதியை ரத்து செய்வதுடன், அனுமதி அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி உறுப்பினர் தமிமுன்அன்சாரி தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் கோமதிசேகர், துணைத்தலைவர் மலர்விழி, வார்டு உறுப்பினர்கள் கவிதா, தமிழ்முல்லை, ஜெயலஷ்மி, வைத்தியநாதன், மஞ்சுளா, ரூபாதேவி, ரத்தினவள்ளி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து பல்வேறு முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பீ.டி.ஓ.,(வட்டார ஊராட்சி) யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.