திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளியூர்களில் இருந்து ஊழியர்கள் தங்கி வேலை செய்கின்றனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு மக்கள் மற்றும் ஊழியர்கள் செல்வதற்கு வசதியாக திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, சிறப்புப் பேருந்துகள் நேற்று முதல், பொங்கல் விழா வரைக்கும் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ஹரிபாபு கூறியதாவது:
பொங்கல் பண்டிகையையொட்டி, நேற்று காலை முதல், பொங்கல் விழா வரைக்கும், நம் போக்குவரத்து பணிமனையில் இருந்து, திருச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை கோயம்பேடு ஆகிய இடங்களுக்கு மொத்தம் 22 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதாவது. திருத்தணி- - கோயம்பேடு வழியாக, திருச்சிக்கு, 10 பேருந்துகளும், திருத்தணி - -காஞ்சிபுரம் வழியாக விழுப்புரத்திற்கு ஆறு பேருந்துகளும், திருத்தணி- -- கள்ளக்குறிச்சிக்கு நான்கு பேருந்துகளும், திருத்தணி- - காஞ்சி புரம் வழியாக திருச்சிக்கு இரண்டு பேருந்துகளும் என மொத்தம், 22 பேருந்துகள் பொங்கல் பண்டிகை நாட்கள் வரை இயக்கப்படுகின்றன.
பயணியர் தேவை அதிகமாக இருப்பின் கூடுதல் பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.