திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பொதுமக்கள், தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளை திருஷ்டிக்காக எரிப்பது வழக்கம்.
இதில், செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் 'கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், மற்றும் நச்சுத் துகள்கள்' ஆகியவை வெளிப்படுகின்றன. இதன் வாயிலாக கண், மூக்கு, தொண்டை, தோல், மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நலக் குறைவுகள் ஏற்படுகின்றன.
இதையடுத்து, புகையில்லாப் போகியை கொண்டாடுவது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆட்டோக்கள் வாயிலாக விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.