திருவாலங்காடு:திருவள்ளூர் -- அரக்கோணம் சாலையில், திருவாலங்காடு பகுதியில் ஆங்காங்கே குப்பை எரியூட்டப்படுவதால், சாலையில் புகை சூழ்ந்து, வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
திருவாலங்காடு அம்பேத்கர் நகர், சர்க்கரை ஆலை எதிரே உள்ள பகுதி, பராசக்தி நகர், பவானி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பை, திருவள்ளூர் -- அரக்கோணம் சாலையில் எரியூட்டப்படுகிறது.
இதனால் அந்த வழியே செல்லும் கார், லாரி, டிராக்டர், இருசக்கர வாகன ஓட்டிகள் புகைமூட்டம் சூழ்வதால், வாகனத்தை இயக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், சாலையோரம் குப்பை எரியூட்டப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து பி.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குப்பைக் கிடங்கு இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. விரைவில் வர உள்ளது. பின் சாலையோரங்களில் எரியூட்டுவது தவிர்க்கப்படும்' என்றார்.