விஜயநகரா,-ஹம்பி அருகில், பள்ளி மாணவர்களால் காப்பாற்றப்பட்ட அபூர்வமான ஐரோப்பிய பருந்து, சிகிச்சைக்குப் பின் குணமடைந்ததால், மீண்டும் வனத்தில் விடப்பட்டது.
விஜயநகராவின் ஹம்பி அருகில் உள்ள ராணிபேட்டில், முந்தைய மாதம் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது, அபூர்வமான 'ஐரோப்பிய கிரிப்பன் பருந்து' மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு, அதை காப்பாற்றி தண்ணீர் புகட்டினர்.
இதையறிந்த புகைப்படக் கலைஞர் சிவசங்கர் பனகார் என்பவர், மாணவர்கள் வசம் இருந்த பருந்தை மீட்டு, கமலாபுராவின், அடல் பிஹாரி வாஜ்பாய் மிருக காட்சி சாலையில் ஒப்படைத்தார். இங்குள்ள கால்நடை சிறப்பு டாக்டர் வாணி மற்றும் மருத்துவக் குழுவினர், மயக்கத்தில் இருந்த பருந்தை கூண்டில் வைத்து சிகிச்சை அளித்தனர். முழுமையாக குணமடைந்ததால், கூண்டில் இருந்து விடுவித்து, இங்களகி கிராமத்தின் மலையில் நேற்று பறக்க விட்டனர்.
வன விலங்கு ஆய்வாளர் சமன் கொட்டூர் கூறியதாவது:
தற்போது குணமடைந்த, ஐரோப்பிய கிரிப்பன் பருந்து, ஒரு வயதான பறவை. பருந்தை அடையாளம் காண, இதன் காலில் நீல நிற மோதிரம் போடப்பட்டுள்ளது. மோதிரம் மீது 'சியு' என அச்சிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில், இந்தப் பருந்து தென்பட்டால், ஹம்பியில் மீட்கப்பட்டது என்பதை, எளிதாக அடையாளம் காணலாம்.
இத்தகைய ஐரோப்பியன் கிரிப்பன் பருந்துகள், பொதுவாக இந்தியாவின் வடக்குப் பகுதி, வடமேற்குப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
***