பெங்களூரு,-'பெங்களூரு எலஹங்கா விமான பயிற்சி மையத்தில், பிப்., 13 முதல் 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் விமான கண்காட்சி நடக்க உள்ளதால், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' சார்பில், நகரில் தற்காலிக விளம்பர போர்டுகள் வைக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரில் விளம்பர போர்டுகள், பலகைகள் வைக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், பெங்களூரு எலஹங்கா விமானப்படை பயிற்சித் தளத்தில், 'ஏரோ இந்தியா 2023' விமான கண்காட்சி, பிப்., 13 முதல் 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது.
விமான கண்காட்சி நடப்பது தொடர்பாக விளம்பரப்படுத்த, பெங்களூரு மாநகராட்சி சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இம்மனு, தலைமை நீதிபதி வராலே தலைமையிலான 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சி வழக்கறிஞர் ரமேஷ் வாதிடுகையில், ''விமான கண்காட்சிக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருவர். எனவே, தகுந்த தகவல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தற்காலிக பதாகைகள், பேனர், பிளக்ஸ்கள், வழித்தட வரைபடம் ஆகியவற்றை நிறுவ அனுமதிக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்ததும், அவை அகற்றப்படும்,'' என்றார்.
இதை பரிசீலித்த நீதிபதி வராலே, ''விமான கண்காட்சி தொடர்பான பேனர், பிளக்ஸ் வைக்க, எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு அனுமதி வழங்கலாம். அதேநேரத்தில், மாநகராட்சி அதிகார வரம்பில் அங்கீகரிக்கப்படாத விளம்பர பலகைகள் நிறுவுவதை தடுக்க, உயர் நீதிமன்றம் முன்பு வழங்கிய வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.
***