* பஞ்., எல்லைகள் மாற்றம்
துமகூரு: கர்நாடக பஞ்சாயத்து ராஜ் துறையின் சீமா ஆணையம் சார்பில் சமீபத்தில் மாவட்ட, தாலுகா எல்லைகளின் மறு வரையறை செய்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் துமகூரு மாவட்ட பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை 64லிருந்து 57 ஆக குறைக்கப்பட்டுள்ளன. முன்பை விட ஏழு மாவட்ட பஞ்சாயத்து தொகுதிகள் குறைந்துள்ளது. அதே போல தாலுகா பஞ்சாயத்தின் எண்ணிக்கை 173ல் இருந்து 197 ஆக உயர்த்தபட்டுள்ளன.
**
போலீஸ் நிலையத்தில் சீமந்தம்
ராம்நகர்: ராம்நகரை சேர்ந்தவர் அபிலாஷா, 27. இவர் ஏழு ஆண்டுக்கு முன் போக்குவரத்து பிரிவில் ஏட்டாக பணியில் சேர்ந்தார். தற்போது கனகபுரா போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது 8 மாதம் கர்ப்பிணி.
இவருக்கு நேற்று, அவர் பணியாற்றும் போலீஸ் நிலையத்திலேயே சக ஊழியர்கள் சீமந்தம் நடத்தினர். வீட்டில் நடத்துவது போல் அனைத்து சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்பட்டது. சக ஊழியர்களின் குடும்பத்தினரும் பங்கேற்று ஆசீர்வாதம் செய்தனர்.
**
பிரதமருக்கு கடிதம் எழுதிய கிராமத்தினர்
உடுப்பி: உடுப்பி கொள்ளபுரா அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஹுல்கடிகை கிராமம் உள்ளது. இங்கு, சரியான சாலை வசதியில்லை. இதனால், வெளி ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் 4 கி.மீ., காட்டு பாதையாக நடந்து சென்று பஸ்சில் ஏற வேண்டும்.
இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நோயாளிகள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டு பாதை வழியாக நடந்து செல்லும்போது வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென கிராமத்தினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 'சாலை வசதி செய்யவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்' எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
** பள்ளிக்கு பெயின்ட் அடித்த மாணவர்கள்
குடகு: குடகு மடிகேரியில் உள்ள அரசு துவக்க பள்ளி, 100கள் ஆண்டு பழமையானது. இந்த பள்ளியில் படித்த, எத்தனையோ மாணவர்கள் இன்று உயர் பதவியில் நல்ல நிலையில் உள்ளனர். இவர்கள் எல்லோரும், தற்போது அரசு பள்ளியை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, முதல் கட்டமாக பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கு புதிய பெஞ்ச், நாற்காலி, கம்ப்யூட்டர் போன்ற உபகரணங்களை வழங்கினர். பள்ளிக்கு பெயின்ட் அடித்து புதுப்பொலிவாக்கி உள்ளனர். மேலும் பழைய மாணவர்கள் இணைந்து, அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
**