பெங்களூரு,-'எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இத்தனை நாட்களாக தேடி, கோலார் தொகுதி சீட்டை, விலைக்கு வாங்கியது வெட்கக்கேடு' என பா.ஜ., சாடியுள்ளது.
இது குறித்து, 'டுவிட்டரில்' நேற்று பா.ஜ., வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவுக்காக, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சீனிவாச கவுடா, தன் தொகுதியை தியாகம் செய்துள்ளார். இதற்கு பதில் உதவி செய்வதாக சித்தராமையா வாக்குறுதி அளித்ததாக, தனக்கு நெருக்கமானவர்களிடம், சீனிவாச கவுடா கூறியுள்ளார்.
தன் கடைசி தேர்தலுக்கு தயாராகும் சித்தராமையா, இத்தனை நாட்களாக தேடி, சீட் வாங்கியிருப்பது வெட்கக்கேடான விஷயமாகும். சீனிவாச கவுடாவுடன், 17 கோடி ரூபாய்க்கு டீல் பேசியது, ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், சீட்களை விற்பனைக்கு வைத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சீட்டை விலைக்கு வாங்குகிறார்.
தேர்தல் அரசியலில், இதற்கு முன் கேட்டறியாத முறைகேடுகளை, காங்கிரஸ் துவக்கியுள்ளது. பல தவறான நடைமுறைகளை உருவாக்கிய பெருமை கொண்டது. தற்போது கோலார் சீட்டை வாங்கி மற்றொரு பெருமையை சேர்த்துள்ளது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள, அனைத்து விதிமுறைகளையும் ஓரம் கட்டுகிறது.
ஒவ்வொரு முறையும், சித்தராமையா புதுப்புது நபர்களை ஏமாற்றுவார். இம்முறை கோலாரை தேர்வு செய்துள்ளார். அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதையும், வாங்க முடியாது. சித்தராமையா அதிகார மதத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.கே.ரவி குரலை அடக்கினீர்கள். பண பலத்தால் அந்த வழக்கை மூடினீர்கள். இப்போது தொகுதியை வாங்குகிறீர்கள். ஆனால் வாக்காளர்களை வாங்க முடியாது. இம்முறை கோலார் மக்கள், சித்தராமயாவுக்கு பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.