துமகூரு,-பீன்யா மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பீன்யா மேம்பாலத்தின் இரண்டு துாண்களின் கேபிள்கள் துண்டாகி இருந்ததால், கனரக வாகனங்கள் செல்ல மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. துாண்களுக்கு கேபிள்கள் பொருத்திய பின், கனரக வாகனங்களை ஐ.ஐ.எஸ்.சி., எனும் இந்திய அறிவியல் கழகம் ஆய்வு செய்தது. போக்குவரத்திற்கு 'கிரீன் சிக்னல்' கொடுத்த பின் வாகன போக்குவரத்து துவங்கியது.
இந்நிலையில், தற்போது மீண்டும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் அனைத்து துாண்களிலும் கேபிள் அறுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே புதிய கேபிள்களை பொருத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரும் விடப்பட்டு, பிப்ரவரியில் பணிகள் துவங்கும் என தெரிகிறது.
கனரக வாகனங்கள் இயக்கப்பட்டால், துாண் மற்றும் மேம்பாலத்தில் உள்ள அனைத்து கேபிள்கள் அறுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, நேற்று முதல் பீன்யா மேம்பாலத்தில் அடுத்த நான்கு மாதங்கள், கனரக வாகனங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்தின் நுழைவு வாயிலில், கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க, போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேம்பாலம் 120 துாண்களை கொண்டுள்ளது. 240 கேபிள்கள் பொருத்த வேண்டும். ஒவ்வொரு துாணுக்கும் இரண்டு அல்லது இரண்டு கேபிள்கள் பொருத்த வேண்டும், அதற்கு மூன்று மாதங்கள் ஆகும். கேபிளை நிறுவிய பின், ஐ.ஐ.எஸ்.சி., சோதனை முறையில் இயக்கி மேம்பாலத்தை சோதனை செய்யும். அதன்பின் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளது.
இந்த மேம்பாலம் 23 மாவட்டங்களை இணைக்கும் பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பொருளாதார மீட்பு இணைப்பாக உள்ளதால், இதனை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.