சென்னை, தமிழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை சார்பில், தெற்கு மற்றும் மேற்கு பல்கலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டி, கடந்த 9ல் துவங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்த போட்டியில், தமிழகம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ம.பி., உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த 178 பல்கலைகளில் இருந்து, 3,600 வீரர் - வீராங்கனையர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் என, மொத்தம் 24 போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில், குறிப்பாக 100 மீ., 200 மீ., 500 மீ., முதல், 5,000 மற்றும் 10 ஆயிரம் மீ., ஓட்டப் பந்தயம், மினி மாரத்தான் என, 12 வகையாக விளையாட்டுகள் ஓட்டப்பந்தயமாகவே நடத்தப்பட்டன.
ஒவ்வொரு போட்டிகளிலும், வீரர் - வீராங்கனையர் ஆர்வமுடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
அனைத்து போட்டிகள் முடிவில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் மங்களூர் பல்கலை கைப்பற்றியது.
இறுதி நாள் பரிசளிப்பு விழாவில், பல்கலையின் துணைவேந்தர் சுந்தர், தமிழக பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்று வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
Advertisement