ஹாசன்,-''யார் என்ன கூறினாலும், தேர்தலில் நான் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன்,'' என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.
கலபுரகியில், ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று கூறுகையில், ''காங்கிரஸ் தலைவர்களே, சித்தராமையாவை பலியாடாக்க முற்பட்டுள்ளனர். கோலாரில் இவரை, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். அவருக்கு இந்த தொகுதி பாதுகாப்பானது அல்ல. இங்குள்ள தலைவர்களுக்கு ஓட்டுகளை ஈர்க்கும் திறன் இல்லை. எனவே பலவந்தமாக சித்தராமையாவை களமிறக்க முயற்சிக்கின்றனர்,'' என்றார்.
இதற்கு பதிலளித்து ஹாசனில் நேற்று சித்தராமையா கூறியதாவது:
சட்டசபை தேர்தலில், நான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது, என் மகன் யதீந்திராவின் விருப்பம். அது என் கருத்து அல்ல. அவர் தன் தந்தை மீதுள்ள பற்றால், தன் தொகுதிக்கு வரும்படி அழைக்கிறார். யார் என்ன கூறினாலும், தேர்தலில் நான் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன்.
சித்தராமையாவை பலியாடு ஆக்குவதாக, முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். அவர் எங்கள் கட்சியைசேர்ந்தவரா. என்னை யாரும் பலியாடு ஆக்க முடியாது. இது பற்றி மக்கள் தீர்மானிப்பர். எதிர்க்கட்சியினர் ஏதாவது பேசுவர். இதற்கு பதிலளிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.