புதுடில்லி,-அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து புதுடில்லிக்கு, ஏர் இந்தியா பயணியர் விமானம் கடந்த ஆண்டு நவ., 26ல் புறப்பட்டது. இதில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்பவர், மது போதையில் அருகில் இருந்த 72 வயது பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சங்கர் மிஸ்ரா மீது ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என, பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், சங்கர் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது பதில் அளித்த சங்கர் மிஸ்ரா, ''விமானத்தில் சிறுநீர் கழித்தது நான் அல்ல, அந்த வயதான பெண்மணி தான் தன் இருக்கையிலேயே சிறுநீர் கழித்தார்,'' என தெரிவித்துள்ளார்.