சிவகாசி,--வெம்பக்கோட்டை தாலுகாவாக இருந்தும் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அனைத்து பஸ்களும் பயணிகளை ரோட்டிலேயே ஏற்றி, இறக்கி செல்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வெயில், மழை காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகம், தீயணைப்பு நிலையம், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், அரசு பள்ளிகள், போலீஸ் ஸ்டேஷன் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
வெம்பக்கோட்டை சுற்று பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சந்தையாகவும் இருப்பதால், எப்போதும் மக்கள் அதிக அளவில் பல்வேறு தேவைகளுக்கும் வந்து செல்கின்றனர்.
வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம், சாத்துார், கோவில்பட்டி, சங்கரன்கோவில், கழுகுமலை, திருவேங்கடம் போன்ற நகரங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது.
காலை, மாலை நேரங்களில் வெளியூர்களில் இருந்து அரசு பணியாளர்கள், மாணவர்கள், பட்டாசு தொழிலாளர்கள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெம்பக்கோட்டைக்கு பஸ்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அரசு, தனியார் பஸ்கள் வெம்பக்கோட்டையில் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகிறது.
மழை, வெயில் காலங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்க இடமின்றி ரோட்டிலும், கடைகளின் ஓரமும் நிற்க வேண்டியுள்ளது. வெம்பக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் உருவாக்கப்பட்டும், இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே வெம்பக்கட்டையில் விரைவில் புதிய பஸ் ஸ்டாண்டு அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.