அருப்புக்கோட்டை,--வாறுகாலில் விடப்படும் இறைச்சிக்கடை கழிவுகளால் கடும் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டடத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் அசோக்குமார், நகர் நல அலுவலர் ராஜநந்தினி, பொறியாளர் ராமலிங்கம், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்
பாலசுப்பிரமணியன், (மார்க்சிஸ்ட்): பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை தனியார் வாகனம் மூலம் அறிவிப்பு செய்து அதற்கான செலவு ஒரு லட்சம் என அஜெண்டாவில் குறிப்பிட்டுள்ளீர்கள். நகராட்சி வாகனத்தில் வைத்து அறிவிப்பு செய்வதை விட்டுவிட்டு தேவையில்லாமல் ஏன் செலவு செய்கிறீர்கள். நகரில் கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்.
சிவப்பிரகாசம், (தி.மு.க.,): நகராட்சிக்குட்டுப்பட்ட கண்மாய்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுங்கள்.
ராமதிலகம், (அ.தி.மு.க.,): எனது வார்டில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட வேண்டும்.
பழனிச்சாமி, துணை தலைவர் : எம்.பி., நிதியில் கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அப்துல்ரகுமான், (தி.மு.க.,): எனது வார்டில் பத்துக்கும் மேற்பட்ட கறிக்கடைகள் உள்ளன. இவற்றில் வெட்டப்படும் மாடுகளின் கழிவுகள், ரத்தம் அந்தப் பகுதி வாறுகாலில் விடப்பட்டு சுகாதார கேடாக உள்ளது. நகராட்சி சுகாதார பிரிவு கறிக்கடைகளை முறைப்படுத்த வேண்டும்.
மீனாட்சி, (தி.மு.க.,): தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வெறி நாய்கள், நோய் வாய் பட்ட நாய்கள் திரிகின்றன. பொதுமக்களை கடிக்கின்றன.
சுந்தரலட்சுமி, தலைவர்: நாய்கள் பற்றிய புகார் தொடர்ந்து எனக்கு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயகவிதா, (தி.மு.க.,): எனது வார்டில் டாஸ்மாக் அமைந்திருக்கும் பகுதியில் மழலையர் பள்ளிகள், கோவில், மருத்துவமனை, வங்கிகள் என உள்ளது. மாலை 6:00 மணிக்கு மேல் அந்த பகுதி முழுவதையும் குடிமகன்கள் ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றனர். டாஸ்மாக் கடை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ, (தி.மு.க.,): நகரில் கண்ட இடங்களில் குப்பை கொட்டப்படுகிறது. முக்கிய சந்திப்புகளில் உள்ள குப்பை தொட்டிகளில் இரவு நேரங்களில் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் குப்பைகளை கூட்டி நிறைத்து விடுகின்றனர். கடைக்காரர்கள், ஒட்டல்கள் வைத்திருப்பவர்களை அழைத்து ஒரு கூட்டம் போட்டு கண்ட இடங்களில் குப்பை கொட்ட கூடாது என அறிவுறுத்த வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் மிதிக்க வேண்டும்.
அகமது யாசிர், (தி.மு.க.,): பன்றிகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன இவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.-----