அருப்புக்கோட்டை,--அருப்புக்கோட்டை பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் பெற்றனர்.
டெல்லியில் தேசிய அளவிலான அவிஷ்கார் லீக் 2020 போட்டி, ப்ரூடென்ஸ் பள்ளியில் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டி 2 பிரிவுகளில் நடந்தது. முதல் சுற்று ஆன்லைனில் நடந்தது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் நேரடி போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செல்வி, ஐஸ்வர்யலட்சுமி, ஆர்.செல்வி, மதுமிதா, வழிகாட்டி ஆசிரியை இந்துமதி, ஆசிரியை ராமலக்ஷ்மி ஆகியோருடன் பங்கு பெற்றனர்.
மாணவிகள் தங்களுடைய கண்டுபிடிப்பான செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி ஓட்டுநர்களுக்கு பயன்படக்கூடிய 'கான்பி எய்டு' என்ற படைப்பை செயல்முறை விளக்கத்தோடு காட்டினர். இந்த படைப்பிற்கு தேசிய அளவில் 2 வது பரிசாக வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
சாதனை படைத்த மாணவிகளை தேவாங்கர் மகாஜன சபை தலைவர் மாணிக்கவாசகம், பொருளாளர் சங்கர வேல், செயலாளர் ரவிசங்கர், பள்ளிச் செயலர் மணிமாறன், தலைமை ஆசிரியை தவமணி பாராட்டினர்.