ராஜபாளையம்,;மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மலைகளை ஒட்டிய விவசாய நிலங்களில் முளைத்து வரும் கட்டடங்களால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென வன உயரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவித்துள்ளது. இதில் ஒரு பகுதி விருதுநகர் மாவட்டம் வழியாக செல்கிறது.
இப்பகுதியில் தமிழகத்தின் 5வது சரணாலயமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்தை பிப். 2021 அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே இம்மலைத்தொடரின் பல்வகை உயிர் பெருக்கத்திற்கான இயற்கை சூழ் பகுதியில் சுலபமாக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என பல கிராமங்களை வல்லுனர் குழு வரையறுத்துள்ளது.
இந்த பகுதியில் புதிய விவசாயப் பகுதிகள் விரிவாக்கம் செய்யவோ,ே, பட்டா வழங்கவோ, புதிய குடியிருப்புகள் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தவோ கூடாது என்ன நிபுணர் குழு அறிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சேத்தூர், வத்திராயிருப்பு வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலங்களில் விதி மிறல் கட்டடங்கள் ஆடம்பர நோக்கங்களுக்காக மாற்றப்பட்டு உள்ளன. தற்போது புதிய கட்டடங்களும் நீச்சல் குள ம், குளிர்சாதன வசதி, மாடியுடன் கூடிய கட்டடங்களாக வளர்ந்து வருகிறது.
இதனால் ஏற்கனவே இப்பகுதியில் வாழ்ந்து வரும் சிறுத்தை, செந்நாய் காட்டுமாடு, சாம்பல் நிற அணில், யானை, மான், இருவாச்சி, சருகுமான் போன்ற அரிய உயிரினங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை உள்ளது.
இது போன்ற விதிமீறல் கட்டிடங்களால் விவசாயிகள் போர்வையில் இரவு நேரத்தில் தங்கி குதூகலிப்பவர்களால் வன விலங்கு பாதுகாப்பு கேள்வி குறியாகும் நிலை உள்ளது.
எனவே, விவசாய நோக்கம் அல்லாத சொகுசு கட்டடங்கள் விதிமீறல் இடங்களை வனத்துறையினர் கண்காணிப்பிற்குள் கொண்டு வந்த வன விலங்குகளை பாதுகாக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.