சாத்துார்-பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு மூடப்படாத ரோடு, சுகாதாரவளாகமின்றி திறந்த வெளியை நாடும் கொடுமை உட்பட பல்வேறு இன்னல்களில் சாத்துார் நகராட்சி 11வது வார்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
சாத்தூர் நகராட்சியில் மேல காந்தி நகர் பன் ரொட்டி கடைக்காரர் தெரு, பூக்கார தெரு, மகாலட்சுமி திருமண மண்டபத்தெரு, எஸ்.வி.என் தெரு ஆகிய தெருக்களை உள்ளடக்கியது 11வது வார்டு.
பூக்காரத் தெருவில் முறையான ரோடு வாறுகால் வசதி இல்லை. சிறிய மழை பெய்தாலும் சாக்கடை முழுவதும் ரோட்டில் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
பன் ரொட்டி கடைக்காரர் தெருவில் உப்பு தண்ணீர் அடிகுழாய் இல்லை. பெண்கள் பக்கத்து தெருவிற்கு சென்று பிடித்து வருகின்றனர்.
திருமண மண்டபம் தெருவில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டினர். மீண்டும் சரி செய்யப்படவில்லை. வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணியும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
எஸ்.வி.என். தெருவில் சுகாதார வளாகம் இல்லாததால் பொதுமக்கள் திறந்தவெளியை நாடுகின்றனர்.
வார்டில் உள்ள நம்ம டாய்லெட் சுகாதார வளாகத்தின் மீது பிளக்ஸ் கம்பிகளை சாய்த்துள்ளனர். இவை காற்றில் உரசுவதால் டாய்லெட்டின் கூரை சேதமடைந்து ஓட்டை விழுந்துள்ளது. மழைக்காலத்தில் ஒழுகுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
வாறுகால் தள்ள ஆள் வருவதில்லை
முத்துலட்சுமி, குடும்பத் தலைவி: வாறுகால் வசதி மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் வாறுகால் இடிந்து விட்டன. ஒரு பகுதியில் வாறுகால்களை தள்ள ஆட்கள் வந்தால் மற்றொரு பகுதி சாக்கடையை சுத்தம் செய்ய வருவதில்லை. கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.
வாறுகால் பாலம் தேவை
தவமணி, குடும்பத் தலைவி: வார்டில் தெருவின் நடுவில் வாறுகால் செல்கின்றன. அதன் மீது பாலம் இல்லை. ஆட்டோ கூட தெருவுக்குள் வருவது கிடையாது.
மினரல் வாட்டர் வண்டிகளும் ரோடு சரியில்லாததால் தெருவுக்குள் வருவதில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. இந்த தண்ணீரும் கலங்கலாக உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
தெய்வானை, கவுன்சிலர் (மார்க்சிஸ்ட்): நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன். நம்ம டாய்லெட் கூரை சீரமைக்கப்படும். ரோடு,வாறுகால்கள் கட்டவும் நகராட்சி தலைவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாறுகால் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.