ராமநாதபுரம்,-ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக கழிவுநீர் ஆறாக ஓடுவது வாடிக்கையாகிவிட்டது. சுகாதார கேட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நகரில் சேகரிக்கப்படும் கழிவு நீரை வெளியேற்ற சிதம்பரம்பிள்ளை ஊரணி, சிங்காரத்தோப்பு, குண்டூரணி, நாகநாதபுரம், இந்திராநகர் ஆகிய 5 இடங்களில் கழிவு நீரை சேகரிக்க பம்பிங் நிலையங்கள் உள்ளன. 4 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு நீர் கடைசியாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு கழுகூரணியில் சாலைக்குடியிருப்பு பகுதியில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
குழாய்கள் சேதமடைந்தும், அடைப்புகள் காரணமாக கழிவுநீர் ரோட்டில் தேங்குகிறது. கடந்த சில நாட்களாக நகரில் பல இடங்களில் ஆறாக கழிவுநீர் ஓடுகிறது. நேற்று சாலைத்தெருவில் சர்ச், வணிக வளாகங்கள் உள்ள பகுதியில் மேன்ேஹால் நிரம்பி கழிவுநீர் ஆறாக ரோட்டில் ஓடியது. இதனை செம்மங்குண்டு ஊரணிக்கு திருப்பி விட்டனர். அவ்வழியாக நடந்தும், வாகனங்களில் சென்ற மக்கள் துர்நாற்றத்தில் பாதிக்கப்பட்டனர்.
நகராட்சி அதிகாரிகள்கூறுகையில், சுவாமி விவேகானந்தர் சாலையில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை செப்பனிடும் பணி ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அதன் பிறகு கழிவுநீர் பிரச்னை இருக்காது, என்றனர்.