திருப்பூர்:கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த பொங்கல் விழா, விளையாட்டு போட்டிகள் நடப்பாண்டு களைகட்ட போகிறது. குழந்தைகள் மட்டுமின்றி, அனைவரும் பொங்கல் பண்டிகையை குதுாகலத்துடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஜன., மாதம் முழுநேர ஊரடங்கு (ஞாயிற்றுக்கிழமை) அமலில் இருந்தது. அவ்வப்போது கொரோனா தலைகாட்ட துவங்கியதால், கொண்டாட்டங்கள் சற்று குறைந்திருந்தது.
நடப்பாண்டு, கொண்டாட்டங்கள் நேற்றே களைகட்ட துவங்கி விட்டது. இன்று முதல், 17ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை என்பதால், துவக்க, நடுநிலைப்பள்ளி துவங்கி, கலை அறிவியல், பொறியியல் கல்லுாரி வரை பெரும்பாலான கல்வி நிலையங்களில் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது.
இன்று போகி, நாளை பொங்கல். வரும், 16 மற்றும் 17ம் தேதி இரண்டு நாட்களும், அனைத்து சுவாமி விவேகானந்தா சேவா சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயகவாலிபர் சங்கம்,அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அந்தந்த பகுதியிலுள்ள பல்வேறு அமைப்பினர் விளையாட்டு விழா, பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
பள்ளி குழந்தைகள், சிறுவர், சிறுமியருக்கு தனிநபர், குழு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், ஆண்களுக்கு கபடி, வாலிபால், கயிறு இழுத்தல், பெண்களுக்கு கோலப்போட்டி, கயிறு இழுத்தல், லக்கிகார்னர் உள்ளிட்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக இல்லாத கொண்டாட்டம் வரும் வாரத்தில்அனைத்து வீதிகளிலும் கண்டிப்பாக களைகட்டும் என எதிர்பார்க்கலாம்.