ஜமுனாமரத்துார்:செம்மரக் கடத்தலுக்கு உதவ மறுத்த நண்பனை கொலை செய்த வன ஊழியர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த, கீழ் கணவாயூர் கிராமத்தைச் சேர்ந்தவர்விவசாயி ராமதாஸ், 28; இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். ராமதாஸ் வனப்பகுதியை ஒட்டியுள்ள அணைக்கட்டு பகுதியில், குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார்.
ஐந்து நாட்களுக்கு முன், நிலத்திற்கு செல்வதாக மனைவியிடம் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இரண்டு நாட்களுக்கு முன், ஜமுனாமரத்துார் அடுத்த வேடகொல்லை மேடு, அமிர்தி சாலையோரம் ராமதாஸ் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். ஜமுனாமரத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
ராமதாசின் மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்த போது, அவரது பள்ளி தோழன், செய்யாறில் வன ஊழியராக பணிபுரியும் ராஜாராம், 26, அதிக நேரம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, ராஜாராமை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில், வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி, ராமதாஸ் நிலத்தில் பதுக்கி வைத்து கடத்தலில் ஈடுபட, ராஜாராம் உதவி கேட்டுள்ளார்.
ராமதாஸ் மறுக்கவே, ஆத்திரமடைந்த ராஜாராம், செய்யாறை சேர்ந்த அவரது நண்பர்களான குகன், 20, கிருபாகரன், 26, ஆகியோர் உதவியுடன், ராமதாசை காரில் கடத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, சாலையோரம் உடலை வீசியது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜாராமன், குகன், கிருபாகரன் ஆகிய மூவரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.